ADVERTISEMENT

ஜெ எஸ் கே – ஜானகி வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

jsk janaki vs state of kerala movie review july 18

சர்ச்சைகள் சரி; ’சரக்கு’ இருக்கிறதா?

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘ஜெ எஸ் கே – ஜானகி வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’ திரைப்படம் சமீபத்தில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாக அப்படத்தின் நாயகி பெயர் இருப்பதாகவும், படத்தில் வருகிற வசனங்கள் அப்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும், அதன் காரணமாக சென்சார் போர்டு அதற்குத் தடை விதித்ததாகவும் செய்திகள் வந்தன. ஒருவழியாக நாயகி பெயருடன் இனிஷியலை சேர்த்து, தற்போது அப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. jsk janaki vs state of kerala movie review july 18

பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியிருக்கிற இப்படத்திற்கு ஜிப்ரான் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

சரி, சர்ச்சைகள் ஏற்படுத்திய அளவுக்கு ‘ஜெ எஸ் கே’ உள்ளடக்கத்தில் ‘சரக்கு’ இருக்கிறதா?

நீதிமன்ற விசாரணை! jsk janaki vs state of kerala movie review july 18

ஒரு இளம்பெண் தான் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாகப் புகார் அளிக்கக் காவல்நிலையத்திற்குச் செல்கிறார். அதற்குச் சில மணி நேரங்கள் முன்னதாக, அந்த வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிக்கி அவரது தந்தை உயிரிழந்திருக்கிறார். அந்த ஆர்ப்பாட்டமானது ஒரு வழக்கறிஞரைக் காவல் நிலையத்திற்குள் வரவிடாமல் தடுப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில் ஒரு அரசியல்வாதியும் ஒரு காவல் துறை அதிகாரியும் இருக்கின்றனர்.

ADVERTISEMENT

தேவாலயத்தில் கன்னியாஸ்திரிகள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு எதிராக ஆஜரானவர் அந்த வழக்கறிஞர். அந்த வழக்கைத் திசை திருப்ப நடத்தப்பட்ட நாடகத்தில் அந்த வழக்கறிஞர் சிக்கிக் கொள்கிறார். அந்த இளம்பெண்ணின் தந்தை மரணமடைந்தது அதனைச் சாதித்து விடுகிறது.

அந்தப் பெண் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான வழக்கில் பேக்கரி உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்படுகின்றனர். குற்றம் நிகழ்ந்த இடம் அது தான்.

ADVERTISEMENT

ஆனால், அவர்களோ தாங்கள் இரவு கடையை அடைத்தபிறகு அடுத்த நாள் காலையில்தான் அதனைத் திறந்ததாகச் சொல்கின்றனர். போலீசார் அதனை ஏற்பதாக இல்லை.

இந்த நிலையில், அவர்கள் சார்பில் ஏற்கனவே சொன்ன வழக்கறிஞர் ஆஜராகிறார். அவரது வாதத்தின் இறுதியில், அந்த பாலியல் அத்துமீறல் வழக்கு அடிப்படை ஆதாரமற்றதாகக் கூறி தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பெண் உயர்நீதிமன்றத்தில் ‘அப்பீல்’ செய்தாரா? அவருக்கு உரிய நீதி கிடைத்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

சுரேஷ்கோபிக்கு ‘பில்டப்’! jsk janaki vs state of kerala movie review july 18

ஒரு படத்தில் நடிக்கிற நட்சத்திர நாயகருக்குத் திரையில் ‘பில்டப்’ ஷாட்கள், காட்சிகள் ’ஏகபோகமாக’ இருப்பதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். அந்த நாயகருக்கு அரசியல் பின்னணி உண்டென்றால், அந்த ‘பில்டப்’ எப்படிப்பட்டதாக இருக்கும் என்றும் உணர்ந்திருக்கிறோம்.

இந்தப் படத்திலும் சுரேஷ் கோபியின் தற்போதைய அரசியல் பின்னணியைத் தாங்கிப் பிடிக்கிற வகையில், அவருக்கான ‘பில்டப்’கள் நிறையவே இருக்கின்றன. ‘ஹீரோவாக’ மட்டுமே இருந்தபோதே ’பஞ்ச்’ வசனங்களை பக்கம் பக்கமாகப் பேசுவார். ‘அப்பவே அப்படின்னா இப்ப கேட்கவா வேணும்’ என்பது போல, இப்படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

என்ன, அதற்கேற்றவாறு கதை செல்லும் போக்கை மாற்றியமைத்திருப்பதுதான் நெருடுகிறது.

ஜானகி வித்யாதரன் என்ற பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைத் திரையில் தந்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். அழகுப் பதுமையாகப் படங்களில் அவர் வலம் வருவதைப் பார்த்த நமக்கு இது நிச்சயம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

ஆனால், மேற்சொன்ன இருவரது பாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை.

அதனால் திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன், மாதவ் சுரேஷ், அஸ்கர் அலி, பைஜு சந்தோஷ், ஷோபி திலகன் எனப் பலரது நடிப்பு நம் மனதைத் தொடும் அளவுக்கு இல்லை. அவர்களது பாத்திரப் பின்னணி தெளிவாகத் திரைக்கதையில் வெளிப்படவில்லை.

சீரியசாக ஒரு கதையைச் சொல்கிற தொனியைத் தொடக்கத்திலேயே நமக்குத் தந்துவிடுகிறது ரெனதிவேயின் ஒளிப்பதிவு. இயக்குனர் சொல்ல விரும்பிய விஷயங்களைத் திரையில் இறுக்கமாகத் தொகுத்திருக்கிறது சம்ஜின் முகம்மதுவின் படத்தொகுப்பு.

ஜெயன் கிரயோன் கலை வடிவமைப்பு, ஸிங் சினிமாவில் ஒலி வடிவமைப்பு என்று பல தொழில்நுட்ப அம்சங்கள் திரையுடன் நாம் ஒன்ற வழிவகுத்திருக்கின்றன.

கிரிஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை; அதேநேரத்தில் அவை எரிச்சலூட்டும் விதமாகவும் இல்லை.

கிப்ரான் பின்னணி இசையானது திரையில் தோன்றும் காட்சிகளை ஒரு சரத்தில் இறுக்கமாக அடுக்க உதவியிருக்கிறது.

இது போக ஸ்டண்ட் கொரியோகிராபி, டிஐ, விஎஃப்எக்ஸ் எனப் பல அம்சங்கள் சிறப்பாக இப்படத்தில் அமைந்துள்ளன.

படத்தின் இயக்குனர் பிரவீன் நாராயணன், இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியான சுரேஷ் கோபியின் படங்களைப் பார்த்து தீவிர ரசிகர் ஆனவரா என்று தெரியவில்லை. ஏனென்றால், அப்படங்களில் சுரேஷ் கோபியின் இமேஜுக்கு தரப்பட்ட முக்கியத்துவம் திரைக்கதையின் செறிவுக்குத் தரப்படவில்லை.

கிட்டத்தட்ட அப்படியொரு நிலையையே சந்தித்திருக்கிறது ‘ஜெ எஸ் கே – ஜானகி வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’.

வழக்கறிஞராக வரும் சுரேஷ் கோபி முதலில் ஒரு வழக்கில் ஆஜராகிறார். அந்த வழக்கோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று காட்டப்படவே இல்லை.

பிறகு, நாயகிக்கு எதிராக அப்பாத்திரம் ஏன் வாதாட முன்வந்தது என்பதற்கான காரணமும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. உண்மையில் நாயகி பாதிக்கப்பட்டாரா, இல்லையா என்ற விஷயத்தில் அந்த வழக்கறிஞர் எப்போது தெளிவான முடிவுக்கு வந்தார் என்பதும் சொல்லப்படவில்லை.

எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் பிரவீன் நாராயணன், இவற்றுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.

’க்ரைம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ வகைமையில் ‘போர்தொழில்’ போன்று கனகச்சிதமான திரையனுபவங்களைத் தொடர்ந்து சில படங்கள் வழியாகத் தந்து வருகிறது மலையாளத் திரையுலகம். அதற்கு ஈடான அனுபவத்தை இப்படம் தருவதாக இல்லை.

அனைத்துக்கும் மேலாக, இப்படத்திலும் தமிழர் பாத்திரம் ஒன்று இழிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. மங்கலாதேவி எனும் கண்ணகி கோயில் சித்திரை பௌர்ணமி திருவிழாவில் அந்த நபரை நாயகன் தேடி வருவதாக ஒரு காட்சி உள்ளது.  

அதுவரை திரைக்கதை சென்ற திசைக்கும் அக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏன் அப்படியொரு பின்னணி இப்படத்தில் சொல்லப்பட்டது? தெரியவில்லை.

ஆக, இந்தப் படத்தில் சர்ச்சைகளை எழுப்பக்கூடிய விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அவற்றுக்கு முன்பாக, படத்தின் டைட்டிலை முன்வைத்துச் சர்ச்சைகள் எழுந்து ஓய்ந்துவிட்டன.

’சர்ச்சைகளை உருவாக்குற மாதிரியான விஷயங்களைப் புகுத்தி ஒரு படத்தை ஓட வைக்கறதுக்குப் பதிலா, கனகச்சிதமா எப்படி ஒரு கதையைச் சொல்லலாம்னு கொஞ்சம் யோசிக்கலாம்’ என்ற எண்ணத்தைச் சில திரைப்படங்கள் ஏற்படுத்தும். அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘சுமாரான’ திரையனுபவத்தைத் தந்திருக்கும் ‘ஜெ எஸ் கே – ஜானகி வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share