வக்ஃப் வாரிய திருத்த மசோதாவுக்கு ஜேபிசி ஒப்புதல்… கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!

Published On:

| By Selvam

jpc adopts revised waqf bill

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று (ஜனவரி 29) ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபர்களை இடம்பெறச் செய்வது உள்ளிட்ட திருத்தங்களுடன் கடந்த ஆண்டு மத்திய அரசு வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.

ADVERTISEMENT

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்த குழுவானது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆய்வுகள் நடத்தியது.

இந்தநிலையில், டெல்லியில் இன்று வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை இறுதி செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
jpc adopts revised waqf bill

இந்த கூட்டத்தில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு இறுதி செய்து ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 14 பேரும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, “நேற்று (ஜனவரி 28) இரவு 10 மணிக்கு, 650 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கை எங்களுக்குக் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே நாள் இரவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடியும்? இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. வரைவு அறிக்கை அவசர அவசரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து இந்த மசோதாவானது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்பட்டு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share