சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் என்பவர் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினார்.
சாலை கட்டுமானப்பணி ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருந்தது. தொடர்ந்து, மாநில பொதுப்பணித் துறை இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதற்கிடையே செய்தியாளர் முகேஷ் சந்திரகர் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி திடீரென காணாமல் போனார். அவரின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், முகேஷ் கடைசியாக, சுரேஷ் சந்திரகரின் சகோதரர் கூப்பிட்டதால் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, கடந்த 3 ஆம் தேதி பீஜப்பூரின் சட்டன்பரா பஸ்தியில் இருக்கும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் வீட்டில் இருக்கும் கழிவுநீர் தொட்டியிலிருந்து முகேஷ் சந்திரகரின் சடலத்தை மீட்டனர்.
இது கொலை விவகாரத்தில், சுரேஷ் சந்திரகரின் சகோதரர்களான தினேஷ் சந்திரகர் மற்றும் ரித்தேஷ் சந்திரகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே முக்கிய குற்றவாளியான சுரேஷ் சந்திரகர் தலைமறைவானார். இவரை நேற்று (ஜனவரி 5) ஹைதரபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் செய்தியாளரின் உடற்கூறு ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரின் தலையில் மட்டும் 15 இடங்களில் பலத்த காயம் இருந்துள்ளது. கழுத்து உடைக்கப்பட்டுள்ளது. அவரது இதயப்பகுதியே கிழித்து எடுக்கப்பட்டுள்ளது. கல்லீரல் 4 பகுதியாக கிழிந்து இருந்துள்ளது. முகேஷ் சந்திரகருக்கு உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர், தனது 12 வருட அனுபவத்தில் இப்படி ஒரு கொடூர கொலையை கண்டதில்லை என்று அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும், இருவருக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து 28 வயது இளம் பத்திரிகையாளரை கொன்றுள்ளதும் உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தொல்லியல் ஆய்வுகளின் சுவாரஸ்யம் : உதயச்சந்திரன் சொன்ன முக்கிய தகவல்!