அமேசான் காட்டில் புதைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்!

Published On:

| By admin

அமேசான் காட்டில் பிரபல பத்திரிக்கையாளர் டோம் பிலிப்ஸ் மற்றும் பழங்குடியின நிபுணர் ப்ரூனோ ஆகிய இருவரும் கடந்த 5ஆம் தேதி அமேசான் காட்டின் ரியோ கிராண்டே டு சுலோ மாகாணத்தில் உள்ள சா கேப்ரியல் கிராமத்திலிருந்து மற்றொரு பழங்குடியின கிராமத்திற்கு படகு மூலம் புறப்பட்டனர். அதற்குப் பிறகு இருவரும் அந்த பக்கத்து கிராமத்திற்கு வரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மாயமானதாக கருதி தேடுதல் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் கொன்று புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமேசான் காடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகள் குறித்து பல்வேறு விவகாரங்களை செய்தியாக வெளியிட்டும், அமேசான் பாதுகாப்பு தொடர்பான புத்தகங்களை எழுதியும் வந்தவர் பிரபல பத்திரிக்கையாளர் டோம் பிலிப்ஸ். இவருக்கு வழிகாட்டியாக பிரேசிலை சேர்ந்த பழங்குடியின நிபுணர் ப்ரூனோ பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் அமேசான் காடுகளில் பல்வேறு இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களை குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

கடந்த 5ஆம் தேதி சா கேப்ரியல் கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு புறப்பட்டு சென்ற இருவரும் மாயமானதாக கருதப்பட்டது. அவர்கள் இருவரையும் குறித்து இந்நாள் வரை எந்த தகவல்களும் இல்லாத நிலையில், டோம் பிலிப்ஸ் மற்றும் பழங்குடி நிபுணர் புருனோ பெரேரா ஆகியோரை அமேசானின் தொலைதூரப் பகுதியில் கொன்று புதைத்ததாக மீனவர் அம்ரில்டோ வாக்குமூலம் அளித்துள்ளார் என்று பிரேசில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அம்ரில்டோ அமேசானில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மீன் பிடித்து வந்ததாக தெரிவிக்கும் பிரேசில் போலீசார், இந்த வழக்கு குறித்து அம்ரில்டோவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share