தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டியவர்கள் கதாநாயகனை விட சிறப்பாகவோ அல்லது அவர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டிய அளவுக்கோ நடிக்கும் திறமை மிக்கவர்களாக இருந்தது ஒரு காலம் .
அப்புறம் நடிப்பு எல்லாம் என்னத்துக்கு? நல்லா அழகா இருந்தா போதும் என்றார்கள்.
அப்புறம் அழகு கூட எதுக்கு? வெள்ளையாக இருந்தால் போதும் என்றார்கள்.
அப்புறம் வெள்ளை என்ன கருப்பு என்ன? விவரமா இருந்தால் போதும் என்றார்கள்.
இப்போது ‘சோஷியல் மீடியாவில் கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசி இருக்கணும். இல்லன்னா யாரையாவது வண்டை வண்டையாய் திட்டி இருக்கணும்’ என்பது எல்லாம் சினிமாவில் நடிக்க முக்கியத் தகுதி ஆகி விட்டது .
ஆயிரம் பேரை (சரி, வேரை)க் கொன்றவன் அரை வைத்தியன் என்பது போல ,ஆயிரம் பேரையாவது சோஷியல் மீடியா மூலம் கதற வைத்தவர்கள் எல்லாம் அழகு நட்சத்திரம் ஆகி விடுகிறார்கள்
ஆனால் இவர்களிடம் இருந்து நான் வித்தியாசமானவள் என்று சொல்லாமல் சொல்கிறார் ஜோஷினா.
” சினிமாவிற்கு நடனமாடத் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நான் பரதநாட்டியம் மட்டுமல்ல சினிமாவுக்கான நடனத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன்..பைக் ரைட், கார் டிரைவிங் கற்றுக் கொண்டேன்.குதிரை ஏற்றம் ,சிலம்பம் கற்றுக் கொண்டேன்.. கூத்துப்பட்டறை கலைராணி அவர்களிடம் குரல் பயிற்சியும் பெற்றுள்ளேன். திரைப்படத்தில் திரையில் தோன்றும் தோற்றம் போலவே அதற்கு இணையான மதிப்புள்ளது நடிப்பவர்களின் குரல். குரலின் மூலம் ஒரு பாத்திரத்தை மேலும் வலுப்படுத்தலாம்.ஒரு பாத்திரத்துக்கு ஏற்றபடி எப்படிக் குரலை வெளிப்படுத்துவது, அதில் உள்ள நுணுக்கங்கள் என்ன என்பதையெல்லாம் கற்றுக் கொண்டுள்ளேன்.தெலுங்குப் பட வாய்ப்புகளுக்காகத் தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஜோஷினா.(மேற்கொண்டு மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை எல்லாம் தன் கருத்தாக சொல்லி இருக்கிறார் அதெல்லாம் நமக்கு வேணாம் )
சென்ற மாதம் வெளியான துச்சாதனன் படத்தில் நடித்த இவர் , அடுத்து ‘சூட்கேஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ”படத்தில் மாடியிலிருந்து கீழே விழும் காட்சியில் எந்தவித பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் டூப் போடாமல் நடித்திருக்கிறேன்” என்கிறார் (சொல்றது எதுவும் டூப் இல்லையே ஜோஷி?)
‘மிடில் கிளாஸ்’ படத்தில் ராதாரவி மகளாக, பஹத் பாசில் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படம் ஒன்று, நடிகை செம்மலர் அன்னம் இயக்கும் படம் என்று ஒரு லிஸ்ட் சொல்கிறார் .
முக்கிய விஷயம்..தமிழ் சினிமாவுல தமிழ் தெரியும்ன்னு சொன்னா, அவ்வளவுதான், தெரிஞ்சாலும் வடக்கத்திக்காரங்க மாதிரி குத்திக் குதறி பேசினா டாப் ல போலாம்.
— ராஜ திருமகன்
