வாய் விட்டு சிரிக்க ’இடம்’ இருக்கு..!
’வாங்க சிரிக்கலாம்’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு ‘சிரிப்பு படம்’ காட்டும் வழக்கம் சமீபகாலமாக அருகிவிட்டது. ‘ப்ளாக் ஹ்யூமர்’ பக்கம் சிலரது கவனம் திரும்பிவிட்டதால் அப்படியொரு நிலை நேர்ந்தாலும், கொஞ்சம் பிசகினாலும் ‘மொக்கை படம்பா’ என்று சொல்லிவிடும் அபாயத்தின் காரணமாகவே அத்திசையில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதே உண்மை.
ஏற்கனவே தனக்கிருக்கும் அனுபவத்தின் காரணமாக, அந்த அபாயத்தை எதிர்கொள்ளும் துணிவோடு ‘ஜாலியோ ஜிம்கானா’ தந்திருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்.
பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, மதுசூதன் ராவ், ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.
’மகளிர் மட்டும்’ நாகேஷ் போல பிரபுதேவா படம் முழுக்க பிணம் போல வருவதைச் சொன்னது இப்படத்தின் ட்ரெய்லர். அதனாலேயே, இப்படம் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்குமோ’ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.
சரி, ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் தியேட்டரில் எத்தகைய அனுபவத்தைத் தருகிறது?
’காமெடி’ கதாபாத்திரங்கள்!
தென்காசியில் ’வெள்ளைக்காரன் பிரியாணி’ என்ற பெயரில் ஒரு பிரியாணிக்கடை தொடங்கப்படுகிறது. தாத்தா (ஒய்.ஜி.மகேந்திரன்) அதே பெயரில் ஒரு கடையை நடத்தினார் என்பதற்காக, அதன் நினைவாக மீண்டும் அக்கடையை நடத்துகிறார் பவானி (மடோனா செபாஸ்டியன்). தாய் செல்லம்மா (அபிராமி) மற்றும் இரண்டு சகோதரிகள் மற்றும் தாத்தாவோடு ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அடைக்கலராஜ் (மதுசூதனன் ராவ்) வீட்டில் நடக்கும் விருந்துக்காக, கடன் வாங்கி உணவு சமைக்கிறார் பவானியின் தாத்தா. விருந்து முடிந்தபிறகு, தங்களுக்குத் தர வேண்டிய தொகையை அடைக்கலராஜிடம் கேட்கிறார். ஆனால், அவரோ அந்த பணத்தைத் தர முடியாது என்று தெரிவிக்கிறார். அப்போது ஏற்படும் தகராறினால், பவானியின் கடையை அவரது ஆட்கள் அடித்து நொறுக்குகின்றனர். தாத்தாவையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகின்றனர்.
அதையடுத்து, தாத்தாவை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறார் பவானி. ஏற்கனவே கடன் வாங்கிய நபரிடம் (சுரேஷ் சக்கரவர்த்தி) 25 லட்சம் ரூபாய் பணம் கேட்கிறார். அவரும் தருவதாக உறுதியளிக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் பவானியின் கணக்குக்குப் பணம் வருகிறது. உடனே, அந்தப் பணத்தை எடுத்து மருத்துவமனையில் செலுத்துகிறார்.
அதன்பிறகுதான், அந்தப் பணம் அடைக்கலராஜின் ஆட்களால் தவறுதலாக அனுப்பப்பட்ட விஷயம் தெரிய வருகிறது. பவானி (சாய் தீனா) எனும் அடியாளுக்குச் செல்வதற்குப் பதிலாக, அந்தப் பணம் இந்தப் பவானிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. பணத்தை அந்தக் கும்பல் திருப்பிக் கேட்டு மிரட்டல் விடுக்கிறது. ‘ஒருநாளில் பணம் வேண்டும்’ என்று அவர்கள் சொல்ல, அந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக வழக்கறிஞர் பூங்குன்றனை (பிரபுதேவா) தேடிக் குடும்பத்துடன் செல்கிறார் பவானி.
ஹோட்டல் அறையில் பூங்குன்றன் இறந்து கிடக்கிறார். அதனைக் கண்டு அலறும் பவானியின் குடும்பத்தினர், தங்கள் மீது பழி வந்துவிடுமோ என்ற பயத்தில் அந்தப் பிணத்தை வேறு எங்காவது சென்று வீசியெறிய முடிவு செய்கின்றனர்.
பூங்குன்றன் உயிருடன் இருப்பது போல ‘செட்டப்’ செய்து, அந்த ஹோட்டலை விட்டு வெளியேறுகின்றனர்.
அதேநேரத்தில், கன்னிகா எனும் பெண் பூங்குன்றனைத் தேடி ஹோட்டலுக்கு வருகிறார். அடைக்கலராஜின் ஆட்கள் பூங்குன்றன் பிணத்தைத் தேடி வருகின்றனர்.
அதன்பின் என்னவானது? பவானியின் குடும்பத்தினர் பூங்குன்றன் பிணத்தை என்ன செய்தார்கள்? பூங்குன்றனைக் கொன்றது யார்? அந்தப் பிரச்சனையின் பின்னால் அடைக்கலராஜ் ஆட்கள் இறங்கக் காரணம் என்ன?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியும்விதமாக, ‘ஜாலியோ ஜிம்கானா’வின் மீதிப்பாதி அமைந்திருக்க வேண்டும். ஆனால், பூங்குன்றனுக்கும் அடைக்கலராஜுக்குமான பிரச்சனையைத் திரைக்கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்.
அதனால், பவானியின் குடும்பத்தினர் வீண் பழியில் இருந்து தப்பினார்களா என்பது மட்டுமே திரைக்கதையின் மையப்புள்ளியாக இருக்கிறது.
ஒரு பாதிரியாரைத் (யோகிபாபு) தேடிச் சென்று பவானி பாவ மன்னிப்பு கேட்டு தனது கதையைச் சொல்வதாக, இப்படத்தின் திரைக்கதை தொடங்குகிறது. எங்கெல்லாம் சறுக்கல்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அது தெரியாமல் மூடி மறைக்க அந்த உத்தி உதவியிருக்கிறது.
இந்தக் கதையில் பாதிரியார், அவருடன் இருக்கும் சிறுவன் தொடங்கி பவானி மற்றும் அவரது தாய், தங்கைகள், அடைக்கலராஜின் ஆட்கள், அவர் சார்ந்த கட்சியினர் என்று பல கதாபாத்திரங்களை திரையில் ‘காமெடியன்களாக’ உலாவ விட்டிருக்கிறார் இயக்குனர். அதுவே, இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நாம் சிரிப்பதற்கான உத்தரவாதமாக அமைந்திருக்கிறது.
சிரிப்புக்கான ‘இடம்’!
பிரபுதேவாவைப் படம் முழுக்கப் பிணமாகக் காட்ட வேண்டுமா என்ற தயக்கத்தில், அவரது இருப்பை நியாயம் செய்யும்விதமாகச் சில நீதிமன்றக் காட்சிகள், இரண்டு பாடல்களைச் சேர்த்திருக்கிறார் இயக்குனர். உண்மையைச் சொன்னால், அவை ஆறாம் விரலாகவே உள்ளன. அவை இல்லாமல் இருந்திருந்தாலே இப்படம் இன்னும் செறிவாகத்தான் நோக்கப்பட்டிருக்கும்.
பிணமாக வருமிடங்களில் ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறார் பிரபுதேவா. அவரது நடிப்புத்திறன் எத்தகையது என்பதை இப்படம் காட்டுகிறது. அதிலும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் மனிதர் அசரடித்திருக்கிறார்.
மடோனா செபாஸ்டியன் இதில் பவானியாக வருகிறார். அவரது நடிப்பில் கொஞ்சமாய் ‘செயற்கைத்தனம்’ எட்டிப் பார்க்கிறது.
செல்லம்மாவாக வரும் அபிராமி, ஆங்காங்கே ‘கடி’ ஜோக்குகள் அடித்து கலகலப்பூட்டுகிறார். ‘மாறா’ போன்ற படங்களில் முதிர்ச்சியுடன் தென்பட்டவர், இதில் இளமைப்பொலிவோடு உலா வந்திருப்பதன் ரகசியம் என்னவோ?!
வில்லன்களாக வரும் மதுசூதனன் ராவ், நாஞ்சில் சம்பத், சாய் தீனா, ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்டோர் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றனர். அவர்களது பாத்திரங்களுக்கு ஏற்ப, ஆங்காங்கே ‘சீரியசான’ காட்சிகளைச் சேர்த்திருப்பது இயக்குனரின் ‘டச்’.
யோகிபாபு பேசும் காட்சிகளில் பெரிதாகச் சிரிப்பு வரவில்லை என்றாலும் எரிச்சல் வராமல் இருக்கிறது. அது போதும் என்று ஆறுதல்பட வேண்டுமா, தெரியவில்லை.
ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், ஆதித்யா கதிர், எம்.எஸ்.பாஸ்கர் வருமிடங்கள் கிச்சுகிச்சு மூட்டுகின்றன.
இவர்கள் தவிர்த்து இன்னும் சிலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
தமிழில் ஒரு நகைச்சுவைப்படம் எப்படி இருக்குமோ, அதனை அச்சுப்பிசகாமல் தனது ஒளிப்பதிவில் ஆக்கிக் காட்டியிருக்கிறார் எம்.சி.கணேஷ் சந்திரா.
ஜனார்த்தனனின் கலை வடிவமைப்பு, வழமையான தமிழ் சினிமா பாணியில் ‘செட்’களை திரையில் நிறைத்திருக்கிறது.
ராமர் மற்றும் நிரஞ்சன் ஆண்டனியின் படத்தொகுப்பில், பெரும்பாலான காட்சிகள் சட்டென்று சில நொடிகளில் நகர்கின்றன.
நடிப்புக்கலைஞர்களின் ‘காமெடி டைமிங்’கை கணக்கில் கொண்டு ஒரு ஷாட்டில் இருந்து மற்றும் ஒரு காட்சியில் இருந்து இன்னொன்றுக்கு தாவுவதாக காட்டியிருப்பது அருமை.
ஆனால், பிரபுதேவா சம்பந்தப்பட்ட காட்சிகளை முன்பாதியில் வைத்து திரைக்கதையை ’சவசவ’ என்று ஆக்கியதை மட்டும் பொறுக்க முடியாது.
அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளது. ஆனால், சில பாடல்களில் தொடர்ந்து ‘ம்யூட்’ வருவதைக் கண்டபோது ‘எதற்கு இப்படிப்பட்ட வார்த்தைகளை வரிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும்’ என்ற கேள்வி தானாக எழுகிறது.
பின்னணி இசை பல காட்சிகளில் நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு.
சார்லி சாப்ளின், மகாநடிகன், இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட பல படங்களில் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் இயக்குனர் சக்தி சிதம்பரம். ஆனால், சில ஆண்டுகளாக அவரது பாணி பெரிதாக எடுபடவில்லை. அந்தக் குறையை மறக்கும்விதமாக, ‘ஜாலியோ ஜிம்கானா’வில் பல காட்சிகள் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகின்றன.
திரைக்கதையில் அதற்கான இடம் நிறையவே இருந்தாலும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தாமல் விட்டிருப்பது ஒரு குறையே. ’ஜாலியோ ஜிம்கானா’ எனும் டைட்டிலோடு இணைந்த ‘நான்ஸ்டாப் நான்சென்ஸ்’ எனும் டேக்லைன் போன்றே மொத்த திரைக்கதையும் வார்க்கப்பட்டிருக்கிறது.
ரசிகர்களின் தனிப்பட்ட ரசனையைப் பொறுத்து, அவற்றில் நிறை குறைகள் தென்படலாம். அதனைத் தாண்டி, ‘சிரிக்க வச்சா போதும்னு நினைச்சிருக்கறதே நல்ல விஷயம்’ என்று எண்ண வைக்கிறது இப்படம். அதனால் லாஜிக் மீறல்களையும் சில க்ளிஷேக்களின் ‘அட்ராசிட்டி’யையும் புறந்தள்ளிவிட்டுப் படம் பார்க்கத் தயாராக இருப்பவர்களைக் கிச்சுகிச்சு மூட்டும் ‘ஜாலியோ ஜிம்கானா’.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
அதிக தொகைக்கு ஏலம் : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரிஷப் பந்த்!
தொடங்கியது ஐபிஎல் மெகா ஏலம்: முதல் வீரராக கோடிகளை அள்ளிய இந்திய வீரர்!