அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த ஜான் பாண்டியன், பிரேமலதா விஜயகாந்த் : என்ன நடந்தது?

Published On:

| By Kavi

தமிழக மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் ஜான் பாண்டியன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று (ஜனவரி 10) தமிழக ஆளுநர் ஆர.என். ரவியை சந்தித்து பேசியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம், மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இன்று மாலை 4.15 மணி அளவில், தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் ஜான் பாண்டியன், ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசியுள்ளார். 

அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தென் மாவட்ட படுகொலை மற்றும் “தேவேந்திரகுல வேளாளர்” – பட்டியல் வெளியேற்றம் குறித்தும் மனு அளித்துள்ளார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார்? என்று உங்களுக்கே தெரியும். பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். இந்த அரசு அவர்களை காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கிறது. உண்மையான குற்றவாளிகளை கண்டிப்பது கடினம்.

யார் மீதாவது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டு.. இவர்தான் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்” என்று விமர்சித்தார். 

ஆளுநர் என்ன சொன்னார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் கொண்டு செல்கிறேன் என்று ஆளுநர் சொல்லியிருக்கிறார். அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். 

இதுபோன்று ஒரு இழிநிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என்று ஆளுநர் வருத்தப்பட்டார். 

அதேசமயம், ஆளுநர் கையில்தான் அண்ணா பல்கலைக்கழகம் இருக்கிறது என்பது போலவும் அரசுக்கு சம்பந்தமே இல்லாதது போலவும் நினைக்கிறீர்கள். அது தவறு. 

மாநில அரசு அதிகாரிகளை வைத்து கண்காணித்து இருந்தால் இது போன்ற அவல நிலை ஏற்பட்டிருக்காது” என பதிலளித்தார். 

இந்த விஷயத்தை அரசியலாக பார்க்காதீர்கள் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “அரசியலாக பார்க்க வேண்டாம் என்றால்… உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள். உங்களிடம் தானே பவர் இருக்கிறது. உண்மையான குற்றவாளிகளை பிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

ஜான்பாண்டியனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் இன்று மாலை ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார். 

அவர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் டங்ஸ்டன் சுரங்க விவகாரம் ஆகியவை குறித்து ஆளுநரிடம் மனு கொடுத்தார். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “அண்ணா பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய கொடுமை நடந்திருக்கிறது. கவர்னரிடம் நாங்கள் பேசும்போது அவர் சொல்கிறார்… எஃப்ஐஆர் கூட 4 மணி நேரம் கழித்து தான் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் உண்மையை வெளி  கொண்டு வர காவல்துறை பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. 

ஞானசேகரன் திமுக அனுதாபி தான் என்று முதல்வரே சொல்கிறார். கொஞ்சம் கூட அசிங்கமே இல்லாமல் ஒத்துக் கொள்கிறார். 

திமுக அனுதாபியாக இருந்தால் எப்படி தண்டனை வாங்கி தருவார்கள். அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது என்கிறார்கள். ஆனால் அந்த ஞானசேகருக்கு மிகப்பெரிய தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். யாராவது தவறு செய்தால் அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். 

இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பேசியதை நான் வரவேற்கிறேன். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அதன்படி முதலாவதாக ஞானசேகரனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

டங்ஸ்டன் விவகாரம் குறித்து பேசிய பிரேமலதா, “நான் மேலூர் மக்களிடம் டங்ஸ்டன் சுரங்கம் நிச்சயமாக வராது. அதற்காக நாங்கள் கவர்னரிடம் பேசி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன்படி இன்று கவர்னரை சந்தித்து பேசினேன். அதுபோன்று மேலூர் தாலுகாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்”என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

https://minnambalam.com/political-news/chief-minister-stalin-challenges-leader-of-opposition-edappadi-palaniswami-in-the-legislative-assembly/

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share