ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் 24 சட்டமன்ற தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று(செப்டம்பர் 18) காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதில் 210 ஆண் வேட்பாளர்களும் 9 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
இந்த முதல் கட்ட தேர்தலில் தோதா, கிஷ்த்வர், ரம்பன் அனந்தனாக், புல்வாமா குல்கம் மற்றும் ஷோப்பியன் ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 23.27 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். இதில் 11.76 லட்சம் ஆண்கள் மற்றும் 11.51 பெண்கள் அடக்கம்.
26.72% வாக்குகள் பதிவு!
கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டதற்கு பின் நடக்கும் இந்த முதல் தேர்தலில், இன்று காலை 11 மணி வரை 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலையில் கடுங்குளிர் நிலவியதால், வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றதாகவும், அடுத்த சில மணி நேரங்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு தலைவர்கள் கோரிக்கை!
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் “ இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அனைவரும் தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஒவ்வொரு வாக்கும் வருங்காலத்தை வடிவமைக்கும் சக்தியையும் அமைதியின் சகாப்தத்தைக் கொண்டுவரும் சக்தியையும் கொண்டுள்ளது. முதல்முறை வாக்காளர்கள் இந்த முக்கியமான தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போன்ற தலைவர்களும் ஜம்மு காஷ்மீர் மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை கிராம் உப்பு சாப்பிடலாம் தெரியுமா?
விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? : எடப்பாடி பதில்!