நுனக்குழி : விமர்சனம்!

Published On:

| By christopher

jithu joseph nunakuzhi movie review

சிரிக்கச் சிரிக்க ஒரு ‘க்ரைம்’ மூவி!

2010ஆம் ஆண்டுவாக்கில் மலையாளத் திரையுலகில் வெற்றிக்கொடி நாயகர்களில் பஹத் பாசில், நிவின் பாலி, துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், சன்னி வெய்ன், உன்னி முகுந்தன் என்று ஒரு சிலர் மட்டுமே பிற மொழி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் பசில் ஜோசப்.

ADVERTISEMENT

‘மின்னல் முரளி’ படத்தை இயக்கிப் பெருமளவில் கவனத்தை ஈட்டியபோதும், ஒரு நடிகராக அவர் அடைந்துவரும் புகழ் அதனை மீறியதாக உள்ளது. பால்தூ ஜான்வர், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, பேலிமி, குருவாயூர் அம்பல நடையில் படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்டு அப்பாவித்தனத்தையும் முட்டாள்தனத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளைக் கொண்ட இப்படங்களில் பசில் நடிப்பு அபாரமாக வெளிப்பட்டிருந்தது. அந்த வரிசையில் இப்படமும் இணையுமா என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது ‘நுனக்குழி’ ட்ரெய்லர்.

ADVERTISEMENT

‘த்ருஷ்யம்’, ‘மெமரீஸ்’, ‘நெரு’, ’கூமன்’, ‘தம்பி’, ‘தி பாடி’ படங்களை  க்ரைம் த்ரில்லர் ஆகத் தந்த ஜீத்து ஜோசப், இதனை ‘க்ரைம் காமெடி’ வகைமையில் தந்திருக்கிறார்.

குற்றச் சூழ்நிலையில் நகைச்சுவை என்பது எந்தளவுக்கு நம்மைச் சிரிக்க வைக்கும்? இந்த கேள்விக்கு ‘நுனக்குழி’ என்ன பதிலைத் தருகிறது?

ADVERTISEMENT

Nunakkuzhi (2024) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

அடுக்கடுக்கான சம்பவங்கள்!

சில தவறுகளை மறைக்கச் சொல்லப்படும் சில பொய்கள், அந்தப் பொய்களால் ஏற்படும் சில குற்றங்கள், அந்த குற்றங்களின் தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள், அவற்றால் ஏற்படும் குழப்பங்கள் என்று அடுக்கடுக்கான பல சம்பவங்களைக் கொண்டதாக உள்ளது ‘நுனக்குழி’ திரைக்கதை.

பூழிக்குன்னல் நிறுவனக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மறைந்ததை அடுத்து, அவரது மகன் அபி ஜக்காரியா (பசில் ஜோசப்) அப்பதவிக்கு வருகிறார். நிறுவனங்களை நிர்வகிப்பதில் சுத்தமாக அவருக்கு ஆர்வம் இல்லை.

புது மாப்பிள்ளையான அபி ஜக்காரியாவுக்கு மனைவி ரிமி (நிகிலா விமல்) உடன் காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவதே முக்கியமாகப்படுகிறது.

ஒருநாள் தாங்கள் உறவு கொள்வதை லேப்டாப்பில் பதிவு செய்கிறார் அபி. அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.

அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், இரண்டு பேருக்குமான ரகசியமாக அது இருக்கும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறார் ரிமி. ஆனால், அந்த நினைப்போடு விதி விளையாடுகிறது.

அபி ஜக்காரியாவின் வீட்டிற்குச் சோதனையிட வரும் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த லேப்டாப்பை பறிமுதல் செய்கின்றனர். அதனைத் தாமதமாகத் தெரிந்துகொள்ளும் ரிமி, ’யாருக்கும் தெரியாமல் அந்த லேப்டாப்பை எடுத்துவராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று அபியை எச்சரிக்கிறார்.

அந்த லேப்டாப்போ வருமான வரித்துறை அதிகாரி பாமாகிருஷ்ணனிடம் (சித்திக்) இருக்கிறது. அவரோ, அதனைத் தவறுதலாக தனது உறவினர் நவீன் (அல்தாப் சலீம்) லேப்டாப் உடன் மாற்றி வைத்து விடுகிறார்.

அந்த லேப்டாப் உடன் நவீனை அழைத்துக்கொண்டு முன்னணி நடிகர் சுந்தர்நாத் (மனோஜ் கே ஜெயன்), பைனான்சியர் சாகரனை (பினு பாப்பு) சந்திக்கச் செல்கிறார் பாமாகிருஷ்ணன்.

ஒரு ஹோட்டல் அறையில் சுந்தர்நாத்துக்கு கதை சொல்லத் தொடங்குகிறார் நவீன். அந்த நேரத்தில், சுந்தர்நாத்தின் மனைவி மாயா (சுவாசிகா) பல் மருத்துவர் ஜெயதேவனை (சைஜு குரூப்) சந்திக்கச் செல்கிறார். இருவருக்கும் இடையே ரகசியத் தொடர்பு நெடுநாட்களாக இருந்து வருகிறது.

இன்னொரு புறம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கு விசாரணையில் கணவர் ரஞ்சித்தின் (அஜு வர்கீஸ்) வழக்கறிஞர் தன்னைக் கடுமையாக அவமானப்படுத்திவிட்டதாக வருத்தத்தில் இருக்கிறார் ராஷ்மிதா (கிரேஸ் ஆண்டனி).

விசாரணையின்போது சாட்சி சொன்ன ஜெயதேவனைக் கொல்லும் வெறியில், அவரைத் தேடிச் செல்கிறார்.

தன்னைத் தேடி ராஷ்மிகா வந்ததும், மாயாவை ஒரு அறையில் பூட்டிவைக்கிறார் ஜெயதேவன்.

கோபத்தின் உச்சத்தில் ராஷ்மிகா தாக்கியதில் கீழே விழுகிறார் ஜெயதேவன். பின் தலையில் காயம் பட, அவர் பேச்சுமூச்சற்றுக் கிடக்கிறார்.

அதைக்கண்டு பயந்துபோன ராஷ்மிகா தனது வீட்டிற்குத் திரும்புகிறார். குற்றவாளியாக நிற்பதற்குப் பதில் செத்துப்போகலாம் என்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறார்.

அதற்கு முன்னர் கணவர் ரஞ்சித்துக்கு (அஜு வர்கீஸ்) போன் செய்து விஷயத்தைச் சொல்கிறார். அதனைக் கேட்டதும், ஜெயதேவன் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கும்வரை அமைதியாக இரு’ என்கிறார் ரஞ்சித். ஆனாலும், ராஷ்மிதா அதற்குச் செவி சாய்ப்பதாக இல்லை.

சரியாக, அதே நேரத்தில் பாமாகிருஷ்ணனைத் தேடி அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைகிறார் அபி ஜக்காரியா. நள்ளிரவில் அவர் வருவதைக் காணும் ஒருவர் ‘திருடன் திருடன்..’ என்று கத்துகிறார்.

பதறிப்போய் அங்குமிங்கும் ஓடும் அபி ஜக்காரியா, நேராக ராஷ்மிதாவின் ப்ளாட்டுக்குள் நுழைகிறார். உணவு மேஜையில் அவர் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை எடுத்துக் குடிக்கிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது ‘நுனக்குழி’.

இந்தக் கதையில் அபி ஜக்காரியா, ராஷ்மிதா பாத்திரங்களே முதன்மையாக உள்ளபோதும், இதர பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதனால், பெரும்பாலான காட்சிகளில் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

An eccentric Basil Joseph stars in a fun Jeethu Joseph film | 'Nunakuzhi' movie review | Onmanorama

சரியான கலவை!

ஒவ்வொரு காட்சியிலும் பசில் ஜோசப் தலைகாட்டினாலே சிரிப்பு வருகிறது. அந்த அளவுக்கு நம்மை அவரது பாத்திரத்தோடு பிணைத்திவிடுகிறது அவரது நடிப்பு.

அதிலும் நிறுவனப் பொறுப்புகளைக் கொஞ்சமும் ஏற்க விரும்பாத அப்பாத்திரம், இக்கட்டான சூழல்களில் ‘ஜக்காரியா குழுமத்தின் எம்டி நான்’ என்று சொல்லும்போது சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.

பசிலுக்கு அடுத்தபடியாக, இந்த படத்தில் நம்மை அடித்துச் சாய்க்கிறது கிரேஸ் ஆண்டனியின் நடிப்பு. ‘என்னை ஒரு குடிகாரின்னு கோர்ட்ல சொல்லிட்ட’ என்று அவர் சொல்வதும், அதன் தொடர்ச்சியாக வரும் காட்சிகளும் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.

இவர்கள் இருவரும் போதாதென்று சைஜு குரூப், சுவாசிகா, அஜு வர்கீஸ், மனோஜ் கே ஜெயன், பினு பாப்பு, சித்திக், அல்தாப் சலீம் என்று பலரும் தங்கள் பங்குக்கு கலக்கியிருக்கின்றனர்.

ஆனால் அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது இன்ஸ்பெக்டராக வரும் பைஜு சந்தோஷின் இருப்பு.

கான்ஸ்டபிள்களில் ஒருவராக வரும் அஜீஸ் நெடுமாங்காடு உடன் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ’சிரிப்பு வெடி’.
இந்தப் படத்தில் மேற்சொன்ன அனைவருமே திரையில் ‘சீரியசாக’ தெரிவார்கள். பார்வையாளர்களான நமக்கு அது சிரிப்பாக இருக்கும். அவ்விரண்டையும் சரியான கலவையில் கலந்து தந்திருப்பதுதான் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் வெற்றி.

’கொஞ்சம் எங்களை சீரியசா பாருங்க’ என்று சொல்வது போல, லேனா, நிகிலா விமல் இருவரும் இந்த படத்தில் தோன்றியிருக்கின்றனர். ஆனாலும், இறுதிக்காட்சியில் அவர்களது இருப்பு நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகிறது.

இந்தப் படத்தின் பெருஞ்சிறப்பு, காட்சிகள் விதைக்கும் நகைச்சுவையை உயர்த்திக் காட்டுகிற விதத்தில் அமைந்துள்ள விஷ்ணு ஷ்யாமின் பின்னணி இசை.

சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது. அதேநேரத்தில், காட்சிகள் நிகழும் களங்களையும் திரையில் விஸ்தாரமாகக் காட்டியிருக்கிறது.

விநாயக் விஎஸ்ஸின் படத்தொகுப்பானது கதையைக் குழப்பமின்றித் திரையில் புரிந்துகொள்ள வழி வகுத்திருக்கிறது.

நிறைய பாத்திரங்கள் இருந்தாலும், விதவிதமான உணர்வெழுச்சிகள் காட்சிகளில் நிறைந்திருந்தாலும், காமெடி மற்றும் க்ரைம் படங்களில் பயன்படுத்தப்படும் படத்தொகுப்பு எபெக்ட்களை இதில் அவர் பயன்படுத்தவில்லை.

தயாரிப்பு வடிவமைப்பாளர் பிரசாந்த் மாதவ், ஒலி இயக்குனர் சினு ஜோசப், ஆடை வடிவமைப்பாளர் லிண்டா ஜீத்து என்று இப்படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பானது இயக்குனர் மனதில் நினைத்த உலகத்தைக் காட்டத் துணை நின்றிருக்கிறது.

மிக முக்கியமாக, எழுத்தாக்கத்தை மேற்கொண்டிருக்கும் கே.ஆர்.கிருஷ்ணகுமார் வெவ்வேறு சம்பவங்களையும் பாத்திரங்களையும் இணைக்கும் புள்ளிகளில் கொஞ்சம் கூட ‘லாஜிக் மீறல்கள்’ இல்லை. அந்த நேர்த்தி தான் படம் முழுக்க நம்மைத் திரையோடு ஒன்ற வைத்திருக்கிறது.

இயக்குனர் ஜீத்து ஜோசப், தான் எப்படிப்பட்ட வகைமை கதைகளையும் தருவதில் வல்லவர் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

‘க்ரைம்’ வகைமை கதைகளில் பல கிளைகள் உண்டு என்று தனது முந்தைய படங்களில் நிரூபித்த ஜீத்து, இப்படத்தில் சீரியசான சம்பவங்களைத் திரையில் அடுக்கி அதன் வழியே பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க முடியும் என்று காட்டியிருக்கிறார். அவர் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் அளவுக்கு ‘நுனக்குழி’ உள்ளது.

இதில் குறைகள் இருக்கிறதா? கூர்ந்து கவனித்தால் நிச்சயம் அகப்படும். ஆனால், அதற்கான எண்ணம் தியேட்டரில் இருக்கையில் எழுவதில்லை. ‘இல்லை, அதனைக் கண்டுபிடிப்பேன்’ என்பவர்களுக்கு இப்படம் கண்டிப்பாகப் பிடிக்காது.

ஆக, ஜீத்து ஜோசப் ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது இந்த ‘நுனக்குழி’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசங்கரன் பாடகலிங்கம்

சந்திரபாபு நாயுடுவின் சமயோசித புத்தி… டாடா குழுமத் தலைவரை வளைத்த பின்னணி!

ஆவணி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share