அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்திருந்த அவரது மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் இன்று (மே 3) தள்ளுபடி செய்துள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை கையகப்படுத்தினார் என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது.
அதன்பேரில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அன்று இரவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை ஹேமந்த் சோரனை கைது செய்தது. அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது.
ஆனால் இதுவரை தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு சோரனின் தரப்பில் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என கடந்த 29ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி ஹேமந்த் சோரன் வழக்கினை இன்று விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி நவ்நீத் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உதவாத அபாய சங்கிலி : ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி பலி!
பிளஸ் 2 ரிசல்ட்: தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரிய பள்ளிக்கல்வித்துறை