மறைந்த நடிகையும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘நான் இதற்கு முன் மூன்று முறை வேதா இல்லத்திற்கு வந்துள்ளேன். கடந்த 1977 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் ஒரு படத்தில் நடிக்க இருந்தேன். அதற்கான பேச்சுவார்த்தை நடத்த வேதா இல்லத்துக்கு வந்திருந்தேன். பின்னர், ராகவேந்திரா திருமண மண்டபத்தை திறந்து வைக்க ஜெயலலிதாவை அழைக்க வந்தேன். அடுத்ததாக எனது மகள் திருமணத்திற்கு அழைக்கவும் திருமண அழைப்பிதழ் கொடுக்கவும் வேதா இல்லத்துக்கு வந்தேன்” என்று தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுடன் தான் நடிக்க விருந்த படத்தின் பெயரை குறிப்பிடவில்லை. எனினும் , பில்லா படம் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த படத்தில் ஜெயலலிதா நடிக்க விரும்பவில்லை என்று மறுத்து விட்டார். தொடர்ந்து, நடிகை ஸ்ரீபிரியா இந்த படத்தில் நடித்தார். படம் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரயான் லவுல் என்ற பகுதி நேர பத்திரிகையாளருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘பாலாஜியின் பில்லா படத்தில் நடிக்க எனக்குதான் முதலில் வாய்ப்பு வந்தது. நான் மறுத்த பிறகுதான் ஸ்ரீபிரியாவை பாலாஜி ஒப்பந்தம் செய்தார். ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் நடிக்க நான் விரும்பவில்லை. போதிய அளவு பணம் சம்பாதித்து விட்டேன். எனவே, சினிமாவுக்குக்குள் வருவதை மனம் தடுத்தது’ என்று ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, ஒரு கட்டத்தில் நடிகை ஜெயலலிதா படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி கிடப்பதாக வதந்தி பரவியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த கடிதத்தை ஜெயலலிதா எழுதியதாக தெரிகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் தனக்கு எழுதிய கடிதத்தை பிரையன் லவுல் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.