அதிமுகவில் இருந்து விலகலா? – ஜெயக்குமார் விளக்கம்!

Published On:

| By christopher

jeyakumar clarification on leaving from admk

”பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் சொல்லவே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப்ரல் 14) தெரிவித்தார். jeyakumar clarification on leaving from admk

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி முறிந்தபோது, பாஜகவை குறித்து சரமாரியாக விமர்சித்து வந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயக்குமாரின் வீடியோ வைரல்!

அப்போது, ”பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான், அதிமுகவின் ஆட்சி போனது. தோல்வியே அறியாமல் ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நான் தோற்றேன். இனி பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை; இப்போதும் எப்போதும் கூட்டணி இல்லை” என ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டியளித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதை அறிவித்தார்.

இதனையடுத்து ஜெயக்குமார் பேசிய பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. எனினும் அதுகுறித்து எதுவும் பேசாமல் அவர் மவுனம் காத்து வந்தார்.

எடப்பாடி படம் காணோம்!

இதற்கிடையே தனது எக்ஸ் பக்கத்தில் அவர் நேற்று பதிவிட்டிருந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து போஸ்டரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படம் இடம்பெறவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து ஜெயக்குமார் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஜெயக்குமார் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நான் அப்படி சொல்லவே இல்லை!

அப்போது அவர், ”பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் சொல்லவில்லை. நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. பலர் வேண்டுமேன்ற சமூகவலைதளங்களில் இதுபோன்று பரப்பி வருகின்றனர். நான் அப்படி சொல்லவே இல்லை. நான் பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது.

என்னை அடையாளம் காட்டியது அதிமுக. எனவே வாழ்நாள் முழுவதும் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் எங்கள் பயணம் தொடரும்” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share