சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Jayalalitha jewels to be handed over
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், ரூபி உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்கள் பெங்களூரில் விதான் சவுதாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நகைகளை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை வழக்கு செலவுக்கு பயன்படுத்த வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.5 கோடி செலுத்த உத்தரவு! Jayalalitha jewels to be handed over
இதை விசாரித்த நீதிபதி மோகன், ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக உள்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்றியதற்கான செலவு தொகையாக 5 கோடி ரூபாயை தமிழக அரசு கர்நாடகத்துக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சொத்துக்கள் தங்களுக்கு சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தீபா தீபக் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சூழலில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள், நில பத்திரங்கள் உள்ளிட்டவற்றை பிப்ரவரி 14, 15 தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜனவரி 29) உத்தரவிட்டுள்ளது.
அப்போது போதுமான காவல்துறை பாதுகாப்புடன் இரும்பு பெட்டிகளை எடுத்துக்கொண்டு வர தமிழக காவல்துறைக்கும், நகைகளை தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று கர்நாடக காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நகைகள் எடுத்துச் செல்லப்படுவது, அதை மதிப்பிடுவது உள்ளிட்ட அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன பொருட்கள்?Jayalalitha jewels to be handed over

27 கிலோ தங்க நகைகள், சுமார் 11 ஆயிரம் புடவைகள், 1562 ஏக்கர் நிலப்பத்திர ஆவணங்கள், 44 ஏசி இயந்திரங்கள், 33 தொலைபேசி மற்றும் இன்டர்காம்கள், 131 சூட்கேஸ்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர்க் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 9 டிரெஸ்ஸிங் டேபிள்கள், 81 அலங்கார விளக்குகள், 20 சோபா செட்டுகள், 750 காலணிகள், 31 டிரெஸ்ஸிங் கண்ணாடி டேபிள்கள் மற்றும் 215 படிக வெட்டுக் கண்ணாடிகள் உள்ளிட்ட 400க்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
கடந்த 2004ஆம் ஆண்டு கர்நாடகா அரசு கருவூலத்துக்கு மாற்றப்பட்ட இந்த நகைகளும் சொத்து ஆவணங்களும் 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வருகிறது.