செவிலியர்கள் பிரச்சினைக்கு ஜெயலலிதா ஆட்சிதான் காரணம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், அரசு ஊழியர்களுக்கு இணையாகச் சலுகைகள் வழங்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டம் இன்று (டிசம்பர் 20) மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் செவிலியர்களின் போராட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு அவர், “ காலிப்பணியிடங்கள் உருவாவதற்கு ஏற்ப சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 3,783 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 169 காலிப்பணியிடங்கள் உள்ளன, அவை உடனடியாக நிரப்பப்படும்.
மருத்துவ சேவை என்பது மிகவும் அவசியமானது என்பதால், போராட்டங்களின் போது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
மேலும் அவர், “ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் இந்த ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமன முறை கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் நிரந்தரமாகத்தான் செவிலியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்தப் பிரச்சனை உருவாகக் காரணமே முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறைதான் ” என செவியர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையை சுட்டிகாட்டி கூறினார்.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி இரவு கிளாம்பாக்கத்தில் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சேப்பாக்கத்தில் உள்ள சிவானந்தா சாலையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சென்னை மட்டுமல்லாது கடலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஒப்பந்த செவிலியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தசூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ’2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிகளை நிரந்தரம் செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை’ என்று கூறி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
