ஜெயக்குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Published On:

| By admin

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிப்ரவரி 21ஆம் தேதி இரவு தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, சென்னை ராயபுரம் பகுதியில் திமுகவினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாக அன்றைய தினம் மாலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக ஜெயக்குமார் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு கள்ள ஓட்டுப் போட்டதாக ஒருவரைப் பிடித்து வைத்துக்கொண்டு அவரை தாக்க முயன்றனர்.

ADVERTISEMENT

ஆனால் ஜெயக்குமார், அடிக்காதீங்க என்று அதிமுகவினரைத் தடுத்துவிட்டு சட்டையைக் கழட்ரா என்று அந்த நபரை நோக்கி சத்தம் போட்டார். அவரின் சட்டையைக் கழற்றி அரை நிர்வாணமாக அதிமுகவினர் அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்த சூழலில் திமுகவைச் சேர்ந்தவரைத் தாக்கியதாக ஜெயக்குமார் உட்பட 40க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், ஆபாசமாக பேசுதல் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜெயகுமார் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 7.30 மணி அளவில் சுமார் 50 போலீசார் சென்னை சாந்தோமில் இருக்கும் அவரின் வீட்டின் முன் திரண்டனர்.

ADVERTISEMENT

கைலி அணிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெயக்குமார் முன்பு காவல்துறை அதிகாரிகள் போய் நின்றனர்.

ஜெயக்குமாரிடம் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைப் படித்துக் காட்டி கைது செய்வதாகக் கூறி, ‘வாங்க சார்’ என்றனர் போலீஸ் அதிகாரிகள்.

ஜெயக்குமார், “நான் ஓடுற ஆள் இல்லை. வர்றேன் வெயிட் பண்ணுங்க… லுங்கிய மாத்திட்டு வரேன்’ என்று சொல்ல அதற்கெல்லாம் காத்திராமல் ஜெயக்குமாரை அழைத்துச் சென்று கைது செய்தனர் போலீசார்.

இந்த காட்சிகளை ஜெயக்குமாரின் பின்னால் இருந்து செல்போன் மூலம் படம் எடுத்து அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன் வெளியிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயக்குமாரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்குத் திரண்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் ஜெயக்குமாரை , ஜார்ஜ்டவுன் 15வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு காவல்துறையினர் முன்னிறுத்தினர். அப்போது அவரது தரப்பில், “எந்தவித கொலை முயற்சி தாக்குதல்களிலும் ஈடுபட வில்லை ஒரு பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், அரை நிர்வாணப்படுத்தித் தாக்குவது போன்ற வீடியோ இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தூண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மேஜிஸ்ட்ரேட், ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து ஜெயக்குமார் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஜாமீன் கொடுத்தால், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜாமீன் மனுவை இன்று விசாரிப்பதாக மேஜிஸ்ட்ரேட் ஒத்திவைத்தார்.

மேலும், ஜெயக்குமாரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவ வசதிகளுடன், முதல் வகுப்பு சிறையில் அடைக்க மேஜிஸ்ட்ரேட் அனுமதி வழங்கினார். இதையடுத்து அவர் பூவிருந்தவல்லி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறையில் அடைக்க அழைத்துச் செல்லும் போது திமுக அரசுக்கு எதிராக ஜெயக்குமார் முழக்கமிட, அதிமுக நிர்வாகிகளும் பதில் முழக்கமிட்டனர்.


ஜெயக்குமார் திமுக தொண்டர்களை அரை நிர்வாணப்படுத்தி விட்டார் என்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என சேகர்பாபு தரப்பிலிருந்து முதல்வருக்கு தொடர் வேண்டுகோள் வைக்கப்பட்டு அதன் காரணமாகவே ஜெயக்குமார் இரவே கைது செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் வட சென்னை அரசியல் வட்டாரத்தில்.

**-பிரியா**

Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share