“நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்தோம்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது” என மக்கள் சொல்வதாகத் தவெக அரசை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசுகையில், ” மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும்” என்று மக்களுடைய உணர்வைத் தூண்டி இன்றைக்கு ஒரு ஆட்சி வந்திருக்கின்றது. இந்த ஆட்சி மக்களுக்கு மாற்றத்தைத் தந்திருக்கின்றதா என்றால், “நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்தோம்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது” என்று சொல்லக்கூடிய ஒரு நிலைதான் இங்கே நிலவுகிறது என மக்கள் சொல்கிறார்கள்.
சினிமாவில் வசனம் பேசுவது மிகவும் எளிது. ஆனால், ஆட்சி நடத்துவதற்குப் பொறுப்பு, அனுபவம், முறையான திட்டமிடல் மற்றும் மக்களுடன் கலந்துபேசும் பக்குவம் ஆகியவை அவசியம் தேவை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்றார். மக்களைத் தேடிச் சந்தித்து, அவர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளையும் கண்டார் என்பதுதான் வரலாறு.
இன்றைய சூழலில், குறிப்பாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்பார்ப்பு பெரியதாக உள்ளது. நீட் தேர்வை ஒழிப்பதற்காகவும், அதனை எதிர்ப்பதற்காகவும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அப்போதைய திமுக ஆட்சி மிகப்பலமாகப் போராடியது. ஆனால், தற்போதைய ஆட்சி இதற்கு என்ன செய்யப்போகின்றது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
தமிழ்நாட்டு மக்கள் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருந்து எதை விரும்புகிறார்கள்? எங்களுக்கு விளம்பர ஆட்சி வேண்டாம்; செயல்படக்கூடிய ஆட்சியே வேண்டும். வசன அரசியல் வேண்டாம்; மக்கள் நல அரசியல் வேண்டும். பிம்ப அரசியல் வேண்டாம்; பொறுப்புள்ள நிர்வாகமே வேண்டும் என்று மக்கள் ஏங்குகிறார்கள்.
மக்களின் இந்த ஏக்கத்தை இப்போது எப்படி நிறைவேற்றுவது? அடுத்த சில மாதங்களிலேயே நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரப்போகின்றது. அந்த உள்ளாட்சித் தேர்தலில், உண்மையிலேயே மக்கள் விரும்பக்கூடிய ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சிதான் என்பதை எடுத்துச் சொல்லும் வகையில், நாம் அனைவரும் பொறுப்புணர்வுடன் நம்முடைய வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.
