தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் விமர்சனங்களுக்கு உள்ளான ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா இன்று (செப்டம்பர் 7) பதவி விலகினார்.
ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷிகெரு இஷிபா. இவர், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்டிபி) சார்பில் பதவி வகித்து வந்தார்.
இந்தாண்டு ஜூலை மாதம் நடந்த நாடாளுமன்ற மேலவை தேர்தலில் எல்டிபி கட்சி தோல்வியை சந்தித்தது. இதனால் ஆளும் கட்சி, பெரும்பான்மையை இழந்தது.
இதனால் ஷிகெரு இஷிபா பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதை ஷிகெரு இஷிபா எதிர்த்தார்.
அமெரிக்க வரிகள், விலை உயர்வு மற்றும் வளர்ந்து வரும் பிராந்திய பதட்டங்கள் என ஜப்பான் “பெரிய சவால்களை” எதிர்கொள்ளும் நேரத்தில் பதவி விலகுவது ஒரு அரசியல் வெற்றிடத்தை உருவாக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் நாளுக்கு நாள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவருக்கு எதிராக குரல்கள் வலுத்ததால் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தில் நாளை ஷிகெரு இஷிபாக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததும் அவரது பதவி விலகலுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தனது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில், “லிபரல் டெமோக்ரடிக் கட்சி தலைமை பதவியிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்துள்ளேன். கட்சி பொதுச்செயலாளரிடம் இது குறித்து பேசியுள்ளேன். அடுத்தகட்டமாக தலைவர் பதவிக்கான தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினேன்” என்றி தெரிவித்துள்ளார்.
எனினும் ஜப்பான் நாடாளுமன்ற கீழவையில் பலம் வாய்ந்த கட்சியாக எல்.டி.பி உள்ளதால், அக்கட்சியில் இருந்தே அடுத்த பிரதமர் தேர்வாவதும் உறுதியாகியுள்ளது.
அடுத்த பிரதமருக்கான போட்டியில் எல்.டி.பி கட்சியின் முக்கிய தலைவர்களான சனே டகாய்ச்சி, ஷிஞ்ஜிரோ கோய்ஸுமி, டகாயூகி கோபாயாஷி, யோஷிமாசா ஹயாஷி ஆகியோர் போட்டி வேட்பாளராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
