ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் விஜய் வாய்மூடி மவுனியாக இருக்கும் போது மற்றவர்கள் பதறி, கதறி என்ன ஆகப் போகிறது என சிபிஎம் தமிழ் மாநிலக் குழு செயலாளர் பெ.சண்முகம் சாடியுள்ளார்.
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
இதனிடையே விஜய்க்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசை சாடியும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது எக்ஸ் பதிவில், “தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் தணிக்கை வாரியத்தின் செயல் குறித்து சம்பந்தப்பட்ட ஜனநாயகன்- னே (விஜய்)வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.
வாரியத்தை குறை சொன்னால் ஒன்றிய பாஜக அரசை குறை சொன்னதாக ஆகி விடுமோ என்ற அச்சத்தில் படம் வெளியாவது தள்ளி போனாலும் பரவாயில்லை தன்னை பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று தான் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
மற்றவர்கள் எல்லாம் பதறி என்ன கதறி என்ன ஆகப்போகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.
