ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய்க்கு அரசியல், திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜனநாயகன் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இதனால் நாளை (ஜனவரி 9) வெளியாகவிருந்த ஜனநாயகன் பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரவி மோகன்
மன வேதனையாக இருக்கிறது விஜய் அண்ணா. இந்த நேரத்தில் உங்களுடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். நான் உங்களுடன் ஆதரவாக நிற்கிறேன். உங்களுக்கு தேதி தேவையில்லை. நீங்கள் எப்போது வருகிறீர்களோ… அப்போதுதான் திறப்பு விழா. அந்த தேதி எப்போது வருகிறதோ, அன்றுதான் பொங்கல் பண்டிகை தொடங்கும்.
நடிகர் சிம்பு
விஜய் அண்ணா, பின்னடைவுகள் எப்போதும் உங்களுக்கு தடையாக இருந்ததில்லை. இதை விட பெரிய புயல்களை எல்லாம் நீங்கள் கடந்துவிட்டீர்கள். இதுவும் கடந்து போகும். உண்மையான திருவிழா ஜனநாயகன் வெளியீட்டின் போதுதான் தொடங்கும்.
நடிகர் நந்தா
ஒரு திரைப்படம் என்பது ஒருவருடையது மட்டுமல்ல. இந்த தடைகளால் விஜய் மேல் மக்கள் வைத்திருக்கும் அன்பும் செல்வாக்கும் பலமும் இன்னும் உயரும். ஜனநாயகன் வெறும் படம் மட்டுமல்ல. அது ஒரு எமோஷன். ஜனநாயகன் குழுவுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
இயக்குநர் விஜய் மில்டன்
நான் யாருன்னு காட்றேன்னு பண்ணவங்களுக்கு நாம யாருன்னு காட்டணும்
நடிகர் சாந்தனு
ஜனநாயகன் ரிலீஸுக்காக நடப்பதை எல்லாம் பார்க்கும் போது மன வருத்தமாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் சரி, எல்லா ரசிகர்களும் பார்வையாளர்களும் ஜனநாயகன் குழுவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரு சகோதரனாக விஜய் அண்ணாவுடன் நான் நிற்கிறேன். ஜனநாயகன் வெளியாகும் போதுதான் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கும்.
இயக்குநர் வெங்கட் பிரபு
எதுவாக இருந்தாலும் சரி!! இது இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஃபேர்வெல்லாக இருக்கும்.
இயக்குநர் இசக்கி
ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் விசயத்தில் ஏன் இழுபறி இதில் அரசியல் இருக்கிறதா? ஆம் இருக்கிறது எப்படி இருக்கிறது? மாநிலத்தில் அரசு அடித்தால் மத்திய அரசிடம் ஜனநாயகன் செல்லவேண்டும்.அதைதான் மாநில அரசும் எதிர்பார்க்கிறது.
ஆனால் ஜனநாயகன் மத்தியரசிடம் கெஞ்ச விரும்பவில்லை இருவரும் ஒன்றுதானே என நினைக்கிறானோ என்னவோ தெரியவில்லை. மாநில அரசும் ஜனநாயகன் மத்தியரசிடம் போகட்டும் என எதிர்பார்த்து காத்திருந்தது.காரணம் அதை வைத்து “பார்த்திர்களா ஜனநாயகன் சங்கி”என கூறி வீழ்த்தலாம் என்று இருந்தது. ஆனால் அவன் சென்றது நீதிமன்றம். இது சரியான முடிவு வர இருக்கும் தேர்தலுக்கு. ஜனநாயகம் வென்றே தீரும்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சுயாதீன திரைப்படமான சல்லியர்கள் படத்திற்குத் திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை.
தணிக்கைதாமதத்தால், நாளை வெளியாக வேண்டிய விஜய்யின் பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நட்சத்திரப் படமான ஜனநாயகன் தள்ளி போகிறது.
மற்றொரு பெரிய பட்ஜெட் படமான பராசக்தி நாளை மறுநாள் வெளியாக வேண்டிய நிலையில், தணிக்கைச் சான்றிதழ் இன்னும் கிடைக்காததால் பல மையங்களில் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை…
சினிமாவுக்கு இது கடினமான காலம்!!
திரைத்துறையில் இருக்கும் நாம் அனைவரும் ரசிகர் சண்டைகள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கலையைக் காக்க… சினிமாவை பாதுகாக்க ஒன்றுபட்டுச் செயல்படுவோம்.
இதுபோன்று சினிமா பிரபலங்கள் பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
