பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இதுதொடர்பான வழக்கில் தனி நீதிபதி ஆஷா, சென்சார் சான்றிதழை வழங்க மத்திய திரைப்பட சென்சார் வாரியத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்,
இதை எதிர்த்து சென்சார் வாரியம் மேல்முறையீடு செய்ததில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்து வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது தயாரிப்பு நிறுவனம். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரியும் கேவிஎன் புரொடக்ஷ்ன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மனு இன்னும் எண்ணிடப்படவில்லை.
தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தடுக்கும் முயற்சி என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே உச்ச நீதிமன்றத்தின் முடிவு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால், இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே நேற்றிரவு தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “கடந்த 2025 டிசம்பர் 18ஆம் தேதி தணிக்கை வாரியத்திடம் ஜனநாயகன் படம் சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்த பின், டிசம்பர் 22 அன்று சில மாற்றங்களுடன் UA 16+ சான்றிதழ் வழங்கப்படும் என்று மெயில் அனுப்பினர். எனினும் முறையான சான்றிதழுக்காக காத்திருந்தோம்.
ஆனால் படம் வெளியாகவிருந்த சில நாட்களே இருந்த நிலையில் ஜனவரி 5 அன்று மாலை, ஒரு புகாரின் அடிப்படையில் படம் மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கிடைத்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் ரசிகர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடம் மனமார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
