தெருவில் சுற்றும் மாடுகளைப் பிடிக்க ஜல்லிக்கட்டு வீரர்களா? காரணம் என்ன?

Published On:

| By Kavi

மதுரை மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க தற்போது பிரத்யேக பயிற்சி பெற்ற மதுரை, திருச்சியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்களை களமிறக்கி இருக்கிறது மதுரை மாநகராட்சி.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளில் கேட்பாரற்ற மாடுகளும், கன்றுகளும் அதிகளவு சுற்றித் திரிகின்றன. கோரிப்பாளையம், ஆரப்பாளையம், பழங்காநத்தம், பெரியார் பஸ் நிலையம், ஐயர் பங்களா, மாட்டுத் தாவணி போன்ற முக்கிய போக்குவரத்து சந்திப்பு சிக்னல்களில் கூட மாடுகள், போக்குவரத்திற்கு மிகப்பெரிய தொந்தரவாக இருக்கின்றன. அந்த மாடுகளை போலீஸார் விரட்டிவிட்டு போக்குவரத்தை சீரமைக்கிறார்கள்.

கே.கே.நகர் ரவுண்டானா முதல் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை, நத்தம் நான்கு வழிச்சாலை, அழகர் கோயில் சாலை போன்ற நகரின் முக்கிய சாலைகளில் மாடுகள் திடீரென்று குறுக்காக பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர், கீழே சறுக்கி விழுந்து படுகாயம் அடைகின்றனர். சிலர் அவ்வப்போது மாடுகள் முட்டியும், வாகனங்களில் இருந்து விழுந்தும் படுகாயம் அடைகிறார்கள். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாகக் கூட ஒத்தக்கடையில் மாடு முட்டி, மகளைப் பார்க்க வந்த தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Jallikattu players to catch roaming cows

மாடுகளைப் பிடித்து மாநகராட்சி நகர் நல ஆய்வாளர்கள் அபராதம் விதித்தாலும், மாடுகள் சாலைகளில் திரிவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி பணியாளர்களை அனுப்பும்போது, அவர்கள் பணியும் அன்றைய நாளில் பாதிக்கப்படுவதோடு அவர்களால் முறைப்படி மாடுகளைப் பிடிக்கவும் முடியாமல் போகிறது. சில மாடுகள் அவர்களையும் முட்டி படுகாயம் ஏற்படுத்தி விடுகின்றன.

மாடுகளைப் பிடிக்க அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்த மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாடுகளைப் பிடிக்க முறையாக பயிற்சி பெற்ற ஜல்லிக்கட்டு வீரர்களைத் தேர்வு செய்துள்ளார். அந்த அடிப்படையில் மதுரை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகளைப் பிடிக்க ஆர்வமுள்ள தலைசிறந்த 10 ஜல்லிக்கட்டு வீரர்களை மாநகராட்சி நிர்வாகம் தற்போது களமிறக்கி விட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், “மாடுகளைப் பிடிப்பது, அதனை பராமரிப்பது மாநகராட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால், மாடுகளைப் பிடித்து பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்க மதுரை, திருச்சியை சேர்ந்த பிரத்யேகப் பயிற்சி பெற்ற ஜல்லிக்கட்டு வீரர்களை மாநகராட்சி அனுப்புகிறது.

10 பேர் கொண்ட இக்குழுவினர் 100 வார்டுகளுக்கும் தினமும் செல்கிறார்கள். அப்போது தெருக்களில் திரியும் மாடுகளைப் பிடித்து செல்லூரில் உள்ள மாநகராட்சி செட்டில் அடைத்து பராமரிக்கிறார்கள். ஒரு மாட்டைப் பிடிக்க ரூ.2,000 கட்டணம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த மாட்டை பிடித்து செட்டிற்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும். மாடுகளைப் பிடிக்கிற இடத்தில் உரிமையாளர் வந்து முறையிட்டால் அவர்களுக்கு ஒரு மாட்டுக்கு ரூ.3,000 அபராதமும், கன்றுக்கு ரூ.1,500 அபராதமும் விதித்து மாடு ஒப்படைக்கப்படுகிறது.

செட்டில் கொண்டு வந்து பராமரிக்கும்போது ஒரு மாட்டுக்கு ரூ.5,000, கன்றுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. உரிமையாளர்கள் தேடி வராதப்பட்சத்தில் அந்த மாடுகளை கோசாலைக்கு அனுப்பவும் அல்லது டெண்டர் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாடுகளைப் பிடிப்பது மாநகராட்சி நோக்கமில்லை, மாடுகள் சாலைகளில் திரியாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களில் இதுவரை 60 மாடுகளை இந்த ஜல்லிக்கட்டு குழுவினர் பிடித்துள்ளனர். மாடுகளைப் பிடிப்பதில் ஜல்லிக்கட்டு வீரர்கள் கை தேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று உதவி நகர்நல அலுவலர் விளக்கமளித்துள்ளார்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல்  திண்ணை:  கூட்டணிக் குடைச்சல்…  தனித்தே போட்டியிடணும்!  பெருகும் திமுக நிர்வாகிகள் குரல்!

நைட்டு நடந்தா நாய் கடிக்கும்ல : அப்டேட் குமாரு

’யாரு சாமி நீ’: தேசிய விளையாட்டு தினத்தில் மாஸ் வீடியோ பகிர்ந்த ராகுல் காந்தி

ஜீவா நடிக்கும் ‘பிளாக்’ : ரிலீஸ் எப்போது தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share