ஜல்லிக்கட்டு வழக்கில் 56 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
2017 ஜனவரி 15 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
அலங்காநல்லூர் வாடிவாசலில் குறைந்தது 5 காளைகளையாவது அவிழ்த்துவிடும்படி நடவடிக்கை எடுங்கள், நாங்கள் கலைந்து செல்கிறோம் என்று போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக அமர்ந்திருந்தனர்.
விடிய விடிய போராட்டம் நடந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக அந்த ஊர் மக்கள் உணவு சமைத்து கொடுத்தனர்.
மறுநாள ஜனவரி 18ஆம் தேதி மேலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் அலங்காநல்லூர் போராட்ட களத்தை நோக்கி வந்தனர்.
இந்தசூழலில் போராட்டக்காரர்களை வலுக்காட்டாயமாக போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்தசூழலில் மெரினா உட்பட மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது.
போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் அப்போது முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.
ஆனால் அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம் வேண்டுமென கூறி போராட்டங்கள் தொடர்ந்தன.
இந்தநிலையில் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் 200க்கும் அதிகமானோர் மீது வழக்குப்பாய்ந்தது.
இதையடுத்து 2021 தேர்தல் நெருங்கிய சமயத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடியவர்கள் மீதான வழக்கை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தார்.
ஆனால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த 64 பேர் மீதான வழக்கு மட்டும் ரத்து செய்யப்படவில்லை.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2018 முதல் நடந்து வந்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 3 பேர் உயிரிழந்துவிட்டனர். வழக்கு விசாரணையின் போது 5 பேர் முறையாக ஆஜராகவில்லை.
இதனால் அவர்களை தவிர்த்து மீதமிருந்த 56 பேரையும் இன்று (ஜனவரி 29) விடுவித்து நீதிபதி பாக்யராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
