விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா ரத்தானதால் ரசிகர்கள் பெரும் கவலையில் இருந்தனர். அதன் பிறகு கடந்த மாதம் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து 12 நாட்களில் 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
பல வசூல் சாதனைகளை முறியடித்து பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று நடிகர் விஜய்யை அனைவரும் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 01 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று (நவம்பர் 1) லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை திரிஷா, நடிகை மடோனா செபாஸ்டின், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் அர்ஜுன், நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் உட்பட லியோ படக்குழு மொத்த பேரும் கலந்து கொண்டனர்.
லியோ படத்தின் வெற்றி விழா மேடையில் பேசிய இயக்குனர் ரத்ன குமார், “எவ்ளோ உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆகணும்” என்று கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் “காக்கா, கழுகு” பற்றிய ஒரு குட்டி ஸ்டோரி சொல்லியிருந்தார். அந்த குட்டி ஸ்டோரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் ரத்ன குமார் பேசியுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

Comments are closed.