ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

Published On:

| By Balaji

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படம், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதியன்று அமேசான் பிரைமில் வெளியானது.

இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என திரையுலகத்தினர் பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தங்களுடைய பட நிறுவனத்தின் மூலமாகத் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார்.

ADVERTISEMENT

‘சீன் அட் த அகாடெமி’ என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஆஸ்கார் யூடியூப் சேனல் விவரிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு தனது இடைவிடாத முயற்சியின் மூலம் நீதியைப் பெற்றுத் தந்த சமூக ஆர்வலரான வழக்கறிஞர் சந்துருவால் நடத்தப்பட்ட உண்மையான வழக்கு மற்றும் அது தொடர்பான கள ஆய்வுகளின் அடிப்படையில் ‘ஜெய் பீம்’ உருவாக்கப்பட்டது. அத்துடன் கதை விவரிப்பும், அதனை எவ்வாறு திரைக்கதையாக்கி செயல்படுத்தப்பட்டது என்பதையும் எழுத்தாளரும், இயக்குநருமான தா.செ.ஞானவேல் வெளிப்படுத்தியிருக்கிறார்” என குறிப்பிட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆஸ்கரை தொடர்ந்து அடுத்த அங்கீகாரமாக நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு ஜெய்பீம் திரைப்படம் தேர்வாகி உள்ளது. இதனால், அந்த படத்தை தயாரித்து நடித்த நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். வரும் ஜனவரி 23ம் தேதி 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இதில், 50க்கும் மேற்பட்ட உலகநாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டு வரும் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் இந்த விழாவில் போட்டியிடுவது தமிழ் சினிமாவுக்கே கிடைத்த பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.

**இராமானுஜம்**

ADVERTISEMENT

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share