‘ஜெய் பீம்’ படத்துக்குக் குவியும் பாராட்டுகள்!

Published On:

| By Balaji

ஜோதிகா, சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கும் படம் ‘ஜெய் பீம்’. சூர்யா முதன்முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கிறார். விஜோமோல் ஜோஸ், மணிகண்டன், பிரகாஷ் ராஜ், இயக்குநர் தமிழ், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கர், சின்ராசு, ராஜேந்திரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் த.செ.ஞானவேல். இந்தப் படம் நேற்று ஓடிடியில் வெளியானது அதற்கு முன்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பத்திரிகையாளர்களுக்குத்

திரையிடப்பட்டது. அனைத்து தரப்பினரும் படத்தை ஒரே மாதிரியாகப் பாராட்டி உள்ளனர்.

ஒடுக்கப்பட்ட பழங்குடி இன தம்பதிகளின் வாழ்க்கையையும், முன்னேற வேண்டும் என்ற அவர்களின் மன உறுதியையும், இதற்காக அவர்கள் எதிர்கொண்ட கடினமான துன்பத்தையும் ரத்தமும் சதையுமாக சமரசமில்லாமல் திரைமொழியில் பதிவு செய்யப்பட்டுள்ள படம் ஜெய் பீம்.

சட்டத்தின் வலிமையையும், நீதிக்கான நெடிய போராட்டத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் கடைசி புகலிடம் நீதிமன்றம் என்பதை அழுத்தமாக முகத்தில் அறைந்து கூறியிருக்கிறது ஜெய் பீம்.

வணிக மயமான சினிமாவில் குத்துப்பாட்டும் சண்டைக்காட்சிகளும் நிறைந்த தமிழ் சினிமாவில் மக்கள் பிரச்சினையை பார்வையாளனை எழுந்திருக்க விடாமல் அமர செய்யும் படமாக உள்ளது ஜெய் பீம்.

நட்சத்திர நடிகர் கூட்டம், கதாநாயகிகள் இல்லாமல் சாமன்ய நடிகர்கள், மக்களைக்கொண்டு சிறப்பான திரைப்படத்தைத் தயாரித்து வணிக ரீதியாக வெற்றிபெற முடியும் என்பதை தமிழ் சினிமா மசாலா இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், எனக்காகத்தான் படம் வியாபாரமாகிறது, ஓடுகிறது என கூறி கோடிகளில் சம்பளம் கேட்கும் கதாநாயகர்களுக்கு உணர்த்தி இருக்கிறது ஜெய் பீம்.

பரபரக்கும் சண்டைக்காட்சிகளும், அழகான கதாநாயகியுடன் ஆடிப்பாடும் பாடல் காட்சிகள் மருந்துக்குக்கூட இடம்பெறாத படத்தில் வழக்கறிஞராக ஜெய் பீம் படத்தில் நடித்து முன்னுதாரணமாகியிருக்கிறார் நடிகர் சூர்யா. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஜெய் பீம் வெளியாகி இருக்கிறது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் வாழ்த்துகளால், சமூக ஊடகங்களில் இந்தப் படம் குறித்த விமர்சனம் அனைவரையும் வியக்க வைத்திருப்பதுடன், அண்மைக்காலத்தில் வெளியான தமிழ்ப் படங்களில் தலைசிறந்த தமிழ் படமாக ஜெய் பீம் இருக்கிறது என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெய் பீம் குறித்த தனது கடிதத்தில்

“பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு. நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ‘ஜெய் பீம்’ குறித்து கூறியிருப்பதாவது, “ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

பொது சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக் குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் பா ரஞ்சித் தனது பதிவில், “சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே… இதோ மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட… ராஜாகண்ணுவின் கதை போல பல கதைகள் இனிவரும். அது நம் தலை முறையை மாற்றும். ஜெய் பீம் திரைப்படத்தைக் கொடுத்த திரு.சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல், 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்குப் பெரும் நன்றிகள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இவர்கள் மட்டுமல்லாமல் படத்தை பார்வையிடும் ஒவ்வொரு பார்வையாளர்களும், ராஜாக்கண்ணு – செங்கேணி தம்பதிகள் மீது காவல் துறையினர் ஏவிய அதிகார துஷ்பிரயோகத்தை, சந்துரு போன்ற உண்மையை மட்டும் ஆதாரமாக நம்பும் வழக்கறிஞர்கள், சட்டத்தின் உதவியுடன் போராடி, அவர்களுக்கு நியாயமும், நிவாரணமும் கிடைக்கச் செய்ததைக் கண்டு, தங்களை மறந்து கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவிப்பதும் தொடர்கிறது.

**-இராமானுஜம்**

,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share