நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த துணை ஜனாதிபதி யார்? என்கிற விவாதம் தொடங்கி உள்ளது. Vice President Jagdeep Dhankhar
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தமது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. நாடாளுமன்ற மாநிலங்களவையின் தலைவராகவும் துணை ஜனாதிபதியே செயல்பட்டு வந்தார். தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் சூழலில், ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துளதால் மாநிலங்களவை தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் சாசனத்தின் 91-வது பிரிவின் படி, மாநிலங்களவைத் தலைவருக்கு பதிலாக துணைத் தலைவர் அவையை நடத்துவது வழக்கும். இந்த அடிப்படையில் தற்போதைய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் (ஐக்கிய ஜனதா தளம்- மூத்த பத்திரிகையாளர்), மாநிலங்களவையின் பொறுப்பு தலைவராக செயல்படக் கூடும். புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் வரை, மாநிலங்களவையின் தற்காலிக தலைவராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் செயல்படலாம்.
அடுத்ததாக துணை ஜனாதிபதி தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற கேள்வி எழுகிறது. துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அரசியல் சாசனத்தின் 63வது பிரிவு முதல் 71-வது பிரிவு வரை குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்த 60 நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 19-ந் தேதிக்குள் துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடு பதவி காலம் முடிவடைந்ததால் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கரை, 2022-ம் ஆண்டு தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இந்த தேர்தலில் வென்ற ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027-ல்தான் முடிவடைய இருந்தது. ஆனால் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் மீண்டும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை, மாநிலங்களவையின் எம்பிக்கள் வாக்களிப்பர். நாடாளுமன்ற மக்களவையில் 543; மாநிலங்களவையில் 245 என மொத்தம் 788 எம்பிக்கள் உள்ளனர்.
துணை ஜனாதிபதி தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எம்.பிக்கள் இருப்பதால், அந்த கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவது எளிதானது.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்கிற விவரங்கள் அடுத்து வரும் நாட்களில் வெளியாகும்.
தற்போதைய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங்- பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். 2020-ம் ஆண்டு முதல் மாநிலங்களவை துணைத் தலைவராக இருக்கும் ஹரிவன்ஷ் நாராயண்சிங், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.
