போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் நிலையில், தி.மு.க முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 29) சீல் வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக பதவி வகித்தார். மேலும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்த அவர், கயல் ஆனந்தியின் மங்கை, அமீரின் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தையும் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் கடத்த முயன்றது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த முகேஷ் (33), முஜிபுர் ரஹ்மான் (34) மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் (34) ஆகியோரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 26ஆம் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தனது குடும்பத்துடன் ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.
இதனையடுத்து அவரைத் தேடி தமிழகம் வந்த மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக் சொந்த ஊரான கமுதி மற்றும் ராமநாதபுரத்தில் முகாமிட்டு உள்ளனர்.
மேலும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஜாபருக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாகி இருக்கும் அவரையும், அவரது குடும்பாத்தாரையும் தேடும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா