போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரினை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரும், சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் டெல்லி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக பிப்ரவரி 26-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் ஆஜராகிவில்லை.
இந்தநிலையில், நேற்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் போலீசார் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைத்துவிட்டு சென்றனர்.
ஜாபர் சாதிக்கை கைது செய்ய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதற்காக மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹாலிவுட்டில் ‘ரீமேக்’ ஆகும் முதல் இந்திய படம்!
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: பாஜக மாவட்ட தலைவரை பிடிக்க தனிப்படை!