எங்களை ஏமாற்றினால் 2026-ல் திமுக ஏமாறும்… அரசுக்கு ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை!

Published On:

| By Selvam

“தமிழக அரசு எங்களை ஏமாற்ற நினைத்தால், 2026 சட்டமன்ற தேர்தலில் ஏமாறுவீர்கள்” என்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் இன்று (மார்ச் 23) எச்சரிக்கை விடுத்துள்ளார். Jacto Jio Hunger Strike

ஜாக்டோ ஜியோ போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தநிலையில், மார்ச் 14-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகாததால், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (மார்ச் 23) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகு அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து மார்ச் 30-ஆம் தேதி கூடி முடிவெடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு இன்று உண்ணாவிர போராட்டம் நடத்தினர். சென்னையில் சேப்பாக்கம் எழிலகம், கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ராமநாதபுரம், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு முதலமைச்சர் இந்தியாவில் இருக்கிறார் என்றால் அது முதல்வர் ஸ்டாலின் தான். எங்களை சந்தித்து பேச அவருக்கு மனமில்லை.

இந்த கோரிக்கைகளை கண்டிப்பாக நாங்கள் வென்றெடுப்போம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திமுக அரசு மீது கொந்தளிப்பில் இருக்கிறார்கள். எங்களை ஏமாற்ற நினைத்தால் 2026 தேர்தலில் நீங்கள் ஏமாறுவீர்கள். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு விஜய் ஆதரவு!

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனதில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.

அரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும்.

ஆனால், அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு செய்ய முன்வரவில்லை. அதை விடுத்து, கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் திமுக அரசு ஏமாற்றி உள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். Jacto Jio Hunger Strike

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share