10 கோரிக்கைகளை வலியுறுத்தி 2026 ஜனவரி 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவோம் என்று அரசு ஊழியர்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அறிவித்துள்ளது.
ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நவம்பர் 25-ந் தேதி நடைபெற்றது. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மு. பாஸ்கரன், சே. பிரபாகரன், இலா. தியோடர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் என்ன?
- 01.04.2003 க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்திட வேண்டும்.
- ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினைக் காரணம் காட்டி 23.08.2010 க்கு முன்னதாகப் பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து (TET தேர்விலிருந்து விலக்களித்து) ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
- தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.243, நாள்:21.02.2023 மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் அரசாணை எண்.76, நாள்: 30.09.2024 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
- முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக்களைய வேண்டும். கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS), பேராசிரியர் பணி மேம்பாடு, ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
- சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப்பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய PPP & COE ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமணைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
- அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்காக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5% மாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25% மாக வழங்கிட வேண்டும்.
- 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- 2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
10.சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்திட வேண்டும்.
ஜாக்டோ- ஜியோ நடத்த போகும் போராட்டங்கள்
- வட்டார அளவில் பிரசார இயக்கம்
- டிசம்பர் 13-ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்
- டிசம்பர் 27-ல் மாவட்ட தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
- ஜனவரி 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
ஒருநாள் ஊதியம் பிடித்தம்
இதனிடையே நவம்பர் 18-ந் தேதி ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை பணியாளர்கள் 49,722 பேருக்கு ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ததாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.
