சிபிஎஸ்இ: இனி ஒரே சான்றிதழ்!

Published On:

| By Balaji

இந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் கல்விச் சான்றிதழும் ஒன்றாகச் சேர்த்து வழங்கப்படவுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றன. சிபிஎஸ்இ பள்ளி பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்விச் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் இச்சான்றிதழ் ஒன்றாகச் சேர்த்து வழங்கப்படவுள்ளது.

இதன்படி, நடப்பு ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலுடன் கல்விச் சான்றிதழ் சேர்த்து வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இரண்டும் தனித்தனியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புச் சான்றிதழானது பிறந்த தேதிக்கான ஆவணமாகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. சிபிஎஸ்இ தேர்வுக் குழு முடிவின்படி, இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தனியாகத் தேர்ச்சி சான்றிதழ் தருவதற்குப் பதிலாக தனியாக மதிப்பெண் பட்டியல் மட்டும் வழங்கப்படும். அதே நேரத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வில் இம்ப்ரூவ்மெண்ட் எழுதும் மாணவர்க்கு கல்விச் சான்றிதழுடன் தரப்படும் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்ட பாடத்தில் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வெழுதியது மட்டும் குறிப்பிடப்படும்.

2020ஆம் ஆண்டு முதல் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களிலேயே செய்முறைத் தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது சிபிஎஸ்இ நிர்வாகம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share