உள்ளாட்சித் தேர்தல் : திமுக கேவியட் மனு!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தங்களிடமும் கருத்து கேட்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும் சென்னை மாநகராட்சியில் பழங்குடியினருக்கு ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை என்று கூறி, அதுகுறித்த அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அதில், மே 14-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. ஆனால் ஒரு தேதியை கூறி தேர்தல் நடத்தும் சரியான நாளை குறிப்பிடுமாறு உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதேசமயம், உரிய நேரத்தில் தேர்தல் நடந்திருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று எதிர்பார்த்திருந்த திமுக-வினர் மத்தியில் இது கலக்கத்தை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றம் செல்ல வாய்ப்பிருப்பதால், இன்று காலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில், ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசோ, தேர்தல் ஆணையமோ மேல்முறையீடு செய்தால் அது தொடர்பாக தங்களது கருத்தையும் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share