பல்கலைக் கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று சட்டமன்றத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. இதற்கான வரைவு மசோதாவை மத்திய மனிதவள அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டு, இது குறித்த கருத்துக்களை வரும் 7ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 4) இதுகுறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “யூ.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு பதிலாக, உயர்கல்வி ஆணையம் அமைக்க, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இந்த ஆணையம் மாநிலத்திற்கும், மாநிலங்களில் இருக்கக் கூடிய பல்கலைக் கழகங்களுக்கும் எந்த வகையில் உதவியாக இருக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் 13 பல்கலைக் கழகங்கள் இருக்கிறது. இங்கு யூஜிசியின் உதவியினால் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுக்கெல்லாம் இனி நிதி எப்படிக் கிடைக்கப் போகிறது.
உதாரணமாக அண்ணா பல்கலைக் கழகத்தில் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.ஹெச்டி ஆராய்ச்சி மாணவர்களும், 200க்கும் மேற்பட்ட எம்எஸ் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும் உள்ளனர். இந்நிலையில் உயர்கல்வி ஆணையத்திற்கு நிதி வழங்கும் அதிகாரம் இல்லை என்ற நிலை ஏற்பட்டால், யூஜிசி உதவியோடு கிடைக்கப்பெறும் உதவித் திட்டங்கள், கிடைக்கும் மானியங்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்குத் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன.” என்று கேள்வி எழுப்பினார்.
”ஏற்கனவே, பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை இரண்டாம் தரத்திலே வைத்துப் பார்க்கக்கூடிய வினோதமான அணுகுமுறையை மத்திய அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிற சூழலில், உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டிலும் பா.ஜ.க.,வினுடைய அரசியல் புகுந்து விளையாடுவதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றதோ என்ற ஐயம் எழுகிறது.உயர்கல்வியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பங்களிப்பை செலுத்திவரக்கூடிய மாநில அரசுகளின் கருத்துகளை உயர்கல்வி ஆணையம் அமைப்பதில் மத்திய அரசு கேட்டதா” என்றும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், ஆணையம் அமைக்கப்படுகிற பட்சத்தில் மத்திய அரசினுடைய அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை மாநில அரசு பெற்றிருக்க வேண்டுமென்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ”இதுதொடர்பாக ஜூலை 7ஆம் தேதிக்குள் கருத்துக்களைத் தெரிவிக்க அனைத்து மாநில அரசுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. உயர்கல்வி ஆணையம் தொடர்பாக உயர்கல்வித் துறை ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் பெறப்பட்டு முதல்வர், துணை முதல்வரிடம் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை அளிப்போம் ” என்று குறிப்பிட்டார். யூ.ஜி.சி., அமைப்பின் மூலம் தமிழகம் பெற்று வந்த உரிமைகள் பறிபோகாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
