ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் இந்திய அணி மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியா நைஜீரியா அணிகள் பலபரிட்சை நடத்தின. நேற்று பெண்கள் டேபிள் டென்னிஸ் குழு பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற போட்டியிலும் இந்திய ஆண்கள் அணி சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றது. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் அஷந்தா ஷரத் நைஜீரியாவின் அபியோடுன் உடன் பலபரிட்சை நடத்தினார். முதல் செட்டில் 4-11 என தோல்வியைத் தழுவினாலும், அதன்பிறகு 11-5, 11-4, 11-9 எனத் தொடர்ந்து மூன்று செட்களையும் கைப்பற்றி 1-0 என முன்னிலை பெற செய்தார்.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன் நைஜீரிய வீரர் செகுன் உடன் மோதினார். இதிலும் முதல் செட்டினை இந்திய வீரர் இழந்தார். முதல் போட்டியைப் போல் அடுத்த மூன்று செட்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி இந்திய அணியை 2-0 என முன்னிலை பெற செய்தார். இந்திய அணி மீதமிருந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் பதக்கத்தை கைப்பற்றும் நிலையில் மூன்றாவது ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது.
அதில் ஹர்மீத் தேசாய், சத்தியன் ஞானசேகரன் ஜோடி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. எனவே 11-8, 11-5, 11-3 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதனால் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் இந்திய அணி 9ஆவது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பேட்மிண்டன் கலப்புக் குழுவினரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. முதல் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டமாக நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் சட்விக் ரங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். முதல் செட்டில் 21-14 என வெற்றி பெற்ற அவர்கள் இரண்டாவது செட்டில் 15-21 என தோல்வியைத் தழுவினர். அதனால் மூன்றாவது சுற்றில் வெற்றி பெறும் அணி போட்டியைக் கைப்பற்றும் என்ற நிலை நீடித்தது. அதில் இந்திய அணி 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி சிறப்பாக செயல்பட்டு, 21-17, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
எனவே மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்திய வீரர்கள் சாத்ரிக் ரேங்கிரிடி மற்றும் சிராக் சந்திரசேகர் ஷெட்டி இருவரும், ஷேம் கூ மற்றும் வீ கிங் டான் ஜோடியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவினர். இதனால் தொடர் 2-1 என்ற நிலையில் இருந்தது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் மலேசியாவின் சோனியா செஹாவை எதிர்கொண்டார். அதில் முதல் போட்டியை சாய்னாவும், இரண்டாவது போட்டியை சோனியாவும் கைப்பற்றினர். வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சாய்னா அதிரடியாக விளையாடி 21-9 என வெற்றி பெற்றதால் இந்திய அணி மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்திய அணி இன்று மட்டும் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கம் என 19 பதக்கங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் உள்ளது.,”
