திமுக (DMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டசபை தொகுதியின் தேர்தல் முடிவுகளை முன்பே கணித்திருந்தோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
பரங்கிப்பேட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேராசிரியர் காதர் மொகிதீன் கூறியதாவது: கொளத்தூர் தொகுதியிலே எங்களுடைய மகளிர் அணி வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிச்சாங்க.
கொளத்தூர் தொகுதி நிலவரம் தெரியும்
அப்பவே என்கிட்ட வந்து சொன்னாங்க, “பேராசிரியர், இந்த மாதிரி ட்ரெண்ட் வேற மாதிரி தெரியுது. வீடுகள்ல பெண்கள் எல்லாம் வேற மாதிரி எல்லாம் பேசுறாங்க. இதை நாங்க திமுக வட்டாரத்துக்கு சொல்லி இருக்கோம்” என்று என்கிட்ட சொன்னாங்க.
“ஏதோ மாற்றங்கள் வரப்போற மாதிரி பேசுறாங்க. பெண்கள் மத்தியில நம்ம நினைச்ச மாதிரி திமுகவுக்கு ஓட்டு போடுவாங்களான்னு சந்தேகமா வருதே. பேச்சுகள் எல்லாம் அப்படி வந்துச்சே” என்று கொளத்தூர் தொகுதியில் உள்ள எங்க முஸ்லிம் லீக் சம்பந்தமான மகளிர் அணி எல்லா வீட்டுக்கும் போய்விட்டு வந்து என்கிட்ட சொன்னாங்க. அப்போ நாங்களும் அதைத் தெரிவித்தோம். அதன்படி அவங்க என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு தெரியல. அவ்வளவுதான் உண்மை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரைக்கும் அண்ணா காலத்திலிருந்து, கலைஞர் காலத்திலிருந்து, ஸ்டாலின் காலத்திலிருந்து நீண்ட நாள் நட்பும், அன்யோன்யமும் இருந்தவங்க நாங்க. அதுல வெளியேறுவது என்பது அவ்வளவு ஈஸியா தெரியல.
எடப்பாடியை முதல்வராக்க திமுக ஆதரவு
நாங்க ஸ்டாலின்கிட்ட போன நேரத்துல, அங்க வேற விதமான ஒரு யோசனையில் இருந்ததாக எனக்கு சொல்லப்பட்டது. ஏன்னா இது எடப்பாடி பழனிசாமியை சிஎம் ஆக்கிட்டு, அதுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு கொடுக்கிற மாதிரி பேச்சு இங்கே வந்துட்டு இருக்கு அப்படின்னு ஒரு கருத்து சொல்லப்பட்டது.
இது எனக்கு அதிர்ச்சியாவும் இருந்தது, எதிர்பார்க்காமலும் இருந்தது. இதைக் கேள்விப்பட்டு எனக்கு அவங்க என்ன சொல்றாங்கன்னு எனக்கு தெரியல. என்னமோ சொல்றாங்களே அப்படின்னு நினைச்சுகிட்டு வெளியே வந்தோம்.
திருமாவை முதல்வராக்கும் முயற்சி
அதுக்கு பிறகு தவெகவினர் வந்து ஆதரவு கேட்டாங்க.. விஜய்யே வர்றதா சொன்னாங்க.. நாங்க திரும்பவும் திமுக கிட்ட போய் பேசினோம்.. அப்போ அவங்க சொன்னாங்க… முதல் நாள் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்குறதுக்கு ஒரு யோசனை இருக்குதுன்னு சொன்னாங்க. அடுத்த நாள் திருமாவளவனை சிஎம் ஆக்கலாம் அப்படின்னு யோசனையில… நாங்க கேட்டோம், ‘அவரு எம்எல்ஏ இல்லையே சார்’ அப்படின்னு நான் சொன்னேன். ‘இல்லப்பா, ஒரு ஆறு மாசத்துக்குள்ள பண்ணிடலாம்’ அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னாரு. இது அவர் (ஸ்டாலின்) சொல்லல, அவர் கூட இருந்தவங்க சொன்னாங்க.
ஜனநாயக விரோதமான செயல்
இந்த யோசனையில நமக்கு உடன்பாடா தெரியல. நேத்து சொன்னதும் உடன்பாடா இல்லை, இன்னைக்கு சொல்றதும் நமக்கு உடன்பாடா தெரியல. காரணம் என்னன்னு சொன்னா, மக்கள் ஓட்டு போட்டது வேற ஒரு நிலைமை. இதை மாற்றுவதற்கு கவர்னர்ட்ட விஜய் போய் ‘நாங்க ஆட்சி அமைக்க முடியாது’னு சொல்லி இருந்தார்னா, இப்ப நீங்க எந்த யோசனையும் பண்ணலாம். இது திமுக, அதிமுக எல்லாம் சேரலாம், அல்லது திருமாவளவனை ஆட்சியில அமைக்கலாம், இந்த மாதிரியான யோசனை பிறகு பண்ணி இருந்தா அது நியாயமாக இருக்கும். ஆனால், அவரை அழைக்காமலேயே இப்படி பண்றதுங்கிறது, அது ஜனநாயக நமது சட்ட விரோதமாகவும், சுப்ரீம் கோர்ட்டுடைய தீர்ப்புகள் அடிப்படையிலும் நல்லது இல்லை..
ஆளுநர் செய்வது சரிதான்
வந்தே மாதரம் பிரச்சனையில்.. கவர்னர் விழாவுல, கவர்னர் அவர் செய்யறது தான் அவர் செய்ய முடியும். கவர்னர் என்கிறவர் சென்ட்ரல் கவர்மெண்ட்டுடைய (Central Government) ஏஜென்ட். அவர் வீட்டுல நடக்குது. அவர் வீட்டுல நடக்கிற எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சென்ட்ரல் கவர்மெண்ட் என்ன சொல்லுதோ, அதைத்தான் அவர் பின்பற்றுவார். அது தமிழ்நாடு அரசு விழா அல்ல.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நடக்கிறது தான். சட்டமன்றத்தில் நடக்கிற விழாவுல தான் தமிழ் முதல்ல பேசணும், முதல்ல வந்து சொல்லணும். ஆனா, அங்கே ஜனாதிபதி… இது… ஆளுநர் இடத்தில் நடக்கிறதுக்கு அது சென்ட்ரல் கவர்மெண்ட்டுடைய ஃபாலோ… பின்பற்றி நடக்குது. அதை வந்து நம்ம குறை சொல்ல முடியாது. அது… அது கேட்காட்டிப் போனா கவர்னர் மாத்திருவாங்க.
தீயதை தூயதாக்கும் முயற்சி
அதிமுகவின் 25 எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் நேரில் போய் பார்த்தது என்பது தீயதை தூயதாக்கும் முயற்சிதான்.. அவ்வளவுதான்.. அண்ணா திமுகவுல உள்ளவங்க உடைஞ்சாதான் உடைக்க முடியும். அவங்களா உடைஞ்சுகிட்டா மத்தவங்க என்ன செய்ய முடியும்? திமுக கூட்டணியில் நீடிப்பதா? இல்லையா?ன்னு பொதுக்குழுவை கூட்டி இருக்கிறோம். முடிவு செய்வோம். இவ்வாறு காதர் மொகிதீன் கூறினார்.









