பாஜகவிற்கு வாக்களிப்பது அவமானம், எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்த 22 ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இன்று(மார்ச் 25) மாலை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களான நெல்லை ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் தாரகை ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு தாய் மக்களாக வாழும் இந்தியாவை வெறுப்பு விதைகளை தூவி, நாசம் செய்து விடுவார்கள்.
தேர்தல் வந்துவிட்டது என அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர், வெள்ளம் வந்தபோது எங்கிருந்தார்?
தென் மாவட்டத்தையும் வட மாவட்டத்தையும் மழை வெள்ளம் பாதித்த போது ஒரு பைசாவாவது கொடுத்தீர்களா?. ஓட்டு கேட்டு வந்தபோது கூட மக்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
வெள்ள பாதிப்புக்கு 37 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் தரவில்லை. நாம் உரிமையோடு கேட்பதை தர மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம்.
ஆளுநர் எப்படி மூக்கு அறுபட்டு, வெட்கம் இல்லாமல் இன்னும் அந்தப் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார்?
பாஜக நிதியையும் தராமல் நமது மக்களை ஏளனமாக பேசுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியை தரமாட்டாராம். ஆனால் மாநில அரசு நிவாரண தொகையை வழங்கினால் அதை பிச்சை என்று ஏளனம் செய்வாராம்.
மக்களுக்காக அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அது மக்களுடைய பணம். மக்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவுவது தான் அரசின் கடமை.
மக்களை அவமதித்த போதே உங்களுடைய தோல்வி உறுதியாகிவிட்டது. ஆட்சியும் பதவியும் இருப்பதால் பாஜகவினர் ஆணவத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
ஒரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை பிச்சைக்காரர் என்கிறார், இன்னொரு ஒன்றிய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதி என்று குற்றம் சாட்டுகிறார்.
தமிழக மக்கள் மீது உங்களுக்கு ஏன் இத்தனை கோபம், வெறுப்பு. மக்களிடையே வெறுப்பை விதைத்து பிளவை உண்டாக்கி அதில் குளிர் காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது.
பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துக் கூற வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்கின்ற துரோகம் என்று புரிய வைக்க வேண்டும்.
தமிழகத்துக்காக பிரதமர் மோடி கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் என்ன? அவரால் பதில் சொல்ல முடியுமா?
தமிழகத்துக்காக ஒரு சிறப்பு திட்டத்தை கூட செய்யாமல் பத்தாண்டு காலம் நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள்?
நாங்கள் வரிப்பணம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது.
இதைக் கேட்டாலும் உங்களிடம் பதில் இல்லை. இதற்கும் வாயால் தான் வடை சுடுவீர்களா?
தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை உங்களை போல் வெறுத்த, வஞ்சித்த பிரதமர் இதுவரை கிடையாது.
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது? பிறகு எப்படி தமிழ்நாட்டு மக்கள் நம்புவார்கள்?” என்று கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின்.
மேலும் அவர், “நேருவை என்ன சொல்லி திட்டலாம், சோனியா காந்தியை எப்படி வசைபாடலாம், ராகுல் காந்தியை பார்த்து பயப்படாதது போல் எப்படி நடிக்கலாம்? தேர்தல் பத்திர ஊழலை எப்படி திசை திருப்பலாம் என மோடி யோசித்துக்கொண்டிருக்கிறார்” எனவும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
காங்கிரஸ் விளவங்கோடு வேட்பாளர்: யார் இந்த தாரகை?
“தங்க தமிழ்செல்வன் ஜெயிக்கலனா ராஜினாமா” : அமைச்சர் மூர்த்தி பேச்சு!