கொதிக்கும் சூரியன்… கதிகலங்கும் மக்கள்… வானிலை மையம் அலர்ட்!

Published On:

| By indhu

It will be hot again: Meteorological Department warning!

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 27) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

“ தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 27) முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு

இன்று முதல் மே 31ஆம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் அளவில் படிப்படியாக உயரக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

நாளை (மே 28) முதல் மே 31ஆம் தேதிவரை அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் அல்லது இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் வானிலை முன்னறிவிப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

இன்று (மே 27) தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மற்றும் மே 29ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் ஆட்சி- திருநாவுக்கரசர் நம்பிக்கை!

தாமதமாகக் கொண்டாடப்பட்ட ‘உறியடி’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share