ஐடி வருகை திமுகவுக்குத் தெரியும்போது போலீஸுக்கு தெரியாதா?: அண்ணாமலை

Published On:

| By Kavi

வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (மே 26) காலை முதல் சோதனை நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இதில் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டுக்குச் சென்ற ஐடி அதிகாரிகளை திமுகவினர் தடுத்து நிறுத்தி வாகனங்களைச் சேதப்படுத்தினர்.

இந்தச்சூழலில் வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது.

ADVERTISEMENT

இதைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அஷோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித் துறையினரைப் பணி செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

வருமான வரித்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய தமிழகக் காவல்துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்த போது, காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்?

சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

ஆட்சி மாற்றத்தின் அதிகாரமா செங்கோல்? திருவாவடுதுறை ஆதினம் பதில்!

டிஜிட்டல் திண்ணை: தம்பிக்கு வைத்த பொறி! டார்கெட் செந்தில் பாலாஜி… ஐடி போட்ட டபுள் ஸ்கெட்ச்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share