ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று (ஏப்ரல் 24) காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், மைசூர் மற்றும் பல்லாரி ஆகிய இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவின் முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக ஜி ஸ்கொயர் உள்ளது. இந்நிறுவனத்தின் பிராண்ட் தூதராக கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ் தோனி உள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.38,827.70 கோடியாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 6 மணி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை சேத்துபட்டு, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், காஞ்சிபுரத்தில் ஜி ஸ்கொயருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
பிரியா
