முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டித்துரை வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்த பாண்டித்துரை நெடுஞ்சாலைத் துறை அரசு ஒப்பந்ததாரராக உள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் ரோடு ரோலர் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில் அவர் உயிரிழந்ததை அடுத்து வாரிசு அடிப்படையில் இளநிலை உதவியாளராகத் தனது பணியைத் தொடங்கினார்.
இதையடுத்து புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றார்.
தொடர்ந்து, தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை எடுத்துச் செயல்பட்டு வந்தார்.
எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலும் இவர் ஒப்பந்தங்களை எடுத்துள்ளார்.
சாலையில் பதிக்கக்கூடிய ஒளி பிரதிபலிப்பான், பிரதிபலிப்பு பலகைகள் வைப்பது என பல்வேறு ஒப்பந்தப் பணிகளைச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தரமான பொருட்களைப் பயன்படுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டு மிக அதிகமாகச் சொத்துகளைக் குவித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,
இவருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை, திருச்சி, கோவை என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ஹரிவே லயன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் அவரது அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.
பெரியார் நகரில் உள்ள அவரது மேலாளர் பீட்டர் வீடு, பாண்டித்துரைக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
முதல்நாள் சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியதாகவும், 50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று இரவு வரை நீடித்த ரெய்டு தொடரும் என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (அக்டோபர் 13) காலை முதல் இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பிரியா
