It Ends with Us: விமர்சனம்!

Published On:

| By Selvam

It Ends with Us Movie Review in Tamil

 உதயசங்கரன் பாடகலிங்கம்

ரொமான்ஸை மறக்கடிக்கும் ‘மெலோட்ராமா’!

ADVERTISEMENT

ஆங்கிலத் திரைப்படங்களில் இயக்குனரே நடிகராகவும் தோன்றுவது அரிது. பெரும்பாலான நட்சத்திரங்கள் படங்களை இயக்கும்போது வேறு நாயகர்களைப் பயன்படுத்துவதே அங்குள்ள வழக்கம். அந்த வரிசையில் இருந்து விலகி நின்ற சார்லி சாப்ளின், ஜீன் வைல்டர், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் என்று தெரிந்த ஆளுமைகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அதனாலேயே, ‘It ends with Us’ படத்தை இயக்கிய ஜஸ்டின் பால்டோனியே அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யத்தைத் தந்தது. போதாக்குறைக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று நாட்களும் சென்னையில் அப்படம் தியேட்டர்கள் ‘ஹவுஸ்புல்’ ஆனது. அதுவே, ‘It ends with Us’ படத்தைக் காணும் வேட்கையைத் தோற்றுவித்தது.

ADVERTISEMENT

சரி, படம் எப்படி இருக்கிறது?

நாயகியை மையப்படுத்தும் கதை!

ADVERTISEMENT

போஸ்டன் நகரில் வாழும் லில்லி ப்ளூம் (பிளேக் லைவ்லி), தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காகப் பிளெதோராவுக்குச் செல்கிறார். நீண்ட நாட்கள் கழித்து சொந்த ஊரைக் காணும் அவருக்கு, அங்கு நிகழ்ந்த மாற்றங்கள் வியப்பைத் தருகின்றன.

தாயின் வற்புறுத்தலுக்காகத் தேவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்கிறார் லில்லி. ஆனால், அவரால் தனது தந்தை குறித்த இனிய நினைவுகள் எதையும் பகிர முடிவதில்லை. காரணம், அவரைக் குறித்து நல்ல எண்ணங்கள் ஏதும் லில்லியின் மனதில் இல்லை.

மீண்டும் போஸ்டன் திரும்பும் லில்லி, அங்கு புதிதாக ஒரு மலர் விற்பனையகத்தை ஆரம்பிக்கிறார். அதில் அலீசா (ஜென்னி ஸ்லேட்) என்பவர் வேலைக்குச் சேர்கிறார். பழகிய சில மணி நேரங்களில் இருவரும் நெருக்கமான தோழிகளாக மாறிவிடுகின்றனர்.

ஒருநாள் தனது கணவர் மார்ஷல் (ஹசன் மின்ஹஜ்), சகோதரர் ரைலியை (ஜஸ்டின் பால்டோனி) லில்லிக்கு அறிமுகப்படுத்துகிறார் அலீசா.

முன்னரே லில்லியும் ரைலியும் ஒருவரையொருவர் பார்த்திருக்கின்றனர் என்பது அவர்களது பேச்சில் தெரிய வருகிறது. அப்போது, ‘இவன் எந்தப் பொண்ணோடவும் சேர்ந்திருக்க மாட்டேனே’ என்று ‘சர்ட்டிபிகேட்’ தருகிறார் அலீசா.

அவர் சொன்னதற்கு மாறாக லில்லி உடன் நெருங்கிப் பழகுகிறார் ரைலி. அவரைத் திருமணம் செய்துகொள்கிறார்.

மண வாழ்வில் ரைலியின் உண்மையான தோற்றம் லில்லிக்குக் காணக் கிடைக்கிறது. ஆத்திரம் வரும் நேரத்தில் மனைவியைத் தாக்கும் இயல்புள்ளவராக இருக்கிறார் ரைலி. ஒருநாள் வலுக்கட்டாயமாக லில்லி உடன் உறவு கொள்ளும் அளவுக்கு அவரது செயல்பாடு விகாரமடைகிறது.

அதன்பிறகு லில்லி என்ன முடிவெடுத்தார் என்பதே இப்படத்தின் கிளைமேக்ஸ்.

மேலோட்டமாகப் பார்க்கையில், இக்கதை தட்டையாகத் தென்படும். ஆனால், இதனோடு வேறு சில கிளைக்கதைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

திருமணத்திற்கு முன்னர் ‘டேட்’ செய்யும்போது, பதின்ம வயதில் அட்லஸ் என்பவருடன் தான் காதல் கொண்டிருந்ததாக ரைலியிடம் சொல்வார் லில்லி. அந்தக் கணத்தில் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் ரைலி.

சில ஆண்டுகள் கழித்து போஸ்டனில் உள்ள ஒரு உணவகத்திற்கு ரைலி மற்றும் அலீசா, மார்ஷல் உடன் செல்கையில் மீண்டும் அட்லஸைக் (பிரெண்டன் ஸ்கெலினர்) காண்பார் லில்லி. தொடர்ந்து அவர்களோடு அங்கு செல்வார்.

ஒருமுறை லில்லி, ரைலியிடம் இருக்கும் காயங்களைக் கண்டு கோபப்படுவார் அட்லஸ். அப்போது ரைலியும் அட்லஸும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வார்கள். அதன் தொடர்ச்சியாக, இனி அட்லஸை சந்திக்கவே கூடாது என்று லில்லியிடத்தில் கோபமாகச் சொல்வார் ரைலி.

ஆனால், அடுத்தநாளே லில்லியை நேரில் வந்து சந்திப்பார் அட்லஸ். அது மட்டுமல்லாமல், தனது மொபைல் எண்ணையும் கொடுப்பார்.

பின்னொரு நாள் அதனைத் தற்செயலாகக் காணும் ரைலி, லில்லியிடம் சண்டையிடும்போது மாடிப்படிகளில் இருந்து அவரைத் தள்ளிவிடும் அளவுக்கு மிக மோசமான மனநிலையை அடைவார்.

போலவே, ரைலியைக் குறித்த இன்னொரு உண்மையும் லில்லிக்குத் தெரிய வரும்.

முதல் சந்திப்பின்போது, மருத்துவமனையில் தனது சகோதரனால் சுடப்பட்ட ஒரு சிறுவனுக்குச் சிகிச்சையளித்ததாக லில்லியிடம் சொல்வார் ரைலி.

ஆனால், அது அவரது சிறு வயது நினைவு என்பது அலீசாவின் வழியாக லில்லிக்குத் தெரிய வரும். உண்மையில், ரைலியே சிறு வயதில் தனது சகோதரர் எமர்சனோடு விளையாடுகையில் தந்தையின் நிஜ துப்பாக்கியை எடுத்துப் பயன்படுத்தியிருப்பார்.

இது தவிர, சிறு வயதில் வீடற்றுத் தவிக்கும் அட்லஸுக்கு லில்லி உதவி செய்ததும், அப்போது அவரது பெற்றோர் குறித்து அறிவதும் இன்னொரு விதமான சித்திரத்தைத் தோற்றுவிக்கும்.

இக்கதைகள் அனைத்தும் ஒன்றிணையும்போது, லில்லி என்ற பெண்ணைப் போல இந்த உலகில் நிறைய பேர் இருக்கின்றனர் என்பது நமக்குப் புரிய வரும். அந்த வகையில், இது நாயகியை மையப்படுத்திய கதையாகவே இருக்கிறது.

நல்லதொரு ‘மெலோட்ராமா’!

‘It ends with Us’ படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே இதில் குறைவான நடிகர் நடிகையர் இடம்பெற்றிருப்பது தான்.

லில்லி ஆக பிளேக் லைவ்லியும், அட்லஸ் ஆக பிரெண்டன் ஸ்கெலினரும் நடித்துள்ளனர். அவர்களது இளம் வயது பாத்திரங்களில் முறையே  இசபெல்லா பெரரும் அலெக்ஸ் நியூஸ்டேடரும் தோன்றியுள்ளனர்.

ரைலி ஆக நடித்திருப்பதோடு, இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜஸ்டின் பால்டோனி.

இவர்களோடு ஜென்னி ஸ்லேட், ஹசன் மின்ஹஜ், அமி மோல்டன், கெவின் மெக்கிட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

காலின் கூவர் இதே பெயரில் எழுதிய நாவலைத் தழுவி இப்படம் ஆக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டி ஹால் இதற்கு திரைக்கதையாக்கம் செய்துள்ளார்.

இருவருமே பெண்கள் என்பதால், தியேட்டர்களில் இளம்பெண்களின் வரவேற்பு இவர்களுக்குக் கிடைக்கிறது.

தான் கர்ப்பமுற்றிருப்பதாக ரைலியிடம் லில்லி பாத்திரம் சொல்வதும், அதையடுத்து ஒரு வேண்டுகோள் வைப்பதும், திரைக்கதையில் அப்படியொரு வரவேற்புக்கான உதாரணமாக உள்ளது.

பெரிய செட்கள், விஎஃப்எக்ஸுக்கான இடம் இல்லாமல், ஒரு ‘மினிமம் பட்ஜெட்’ படமாகத் தோற்றமளிக்கிறது ‘It ends with Us’. அதேநேரத்தில், இப்படத்தின் பட்ஜெட் பற்றி நாம் நினைக்காத அளவுக்கு இப்படத்தின் காட்சியாக்கம் அமைந்துள்ளது. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர், இதன் ஒளிப்பதிவாளர் பேரி பீட்டர்சன்.

ரஸ்ஸல் பர்னெஸ் மற்றும் ஆனி சிமியோனின் தயாரிப்பு வடிவமைப்பு அதற்கேற்ற களங்களைத் தந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஊனா ப்ளாஹெர்ட்டி, ராப் சல்லிவன் இருவரும் சமகாலத்திலும் கடந்தகாலத்திலும் நிகழ்வதாக அமைக்கப்பட்ட காட்சிகளைக் குழப்பமின்றித் திரையில் தந்திருக்கின்றனர்.

ராம் சிமோன்சன் மறும் டங்கன் பிளிக்கென்ஸ்டாப்பின் பின்னணி இசை காட்சிகளின் தன்மையை நமக்குக் கடத்துவதாக உள்ளது.

படத்தில் எந்தவொரு கதாபாத்திரத்தையும் முன்னிலைப்படுத்தாமல், லில்லி எனும் பெண் என்ன மனநிலையில் இருந்தார், இருக்கிறார், எதனை அடைகிறார் என்பதைச் சொல்கிறது ‘It ends with Us’ திரைக்கதை. அதனைச் சரியாக உணர வைத்திருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பால்டோனி. அதனைச் சொல்லும்போதே, இது ‘ஸ்லோ’வாக நகரும் ‘மெலோடிராமா’ வகைமை திரைப்படம் என்பதையும் தானாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

காலின் கூவர் எழுதிய நாவலைப் படித்திராதவர்களுக்கு, இப்படம் குறித்த தகவல்கள் எதையும் அறியாதவர்களுக்கு, முதல் பார்வையில் இப்படம் காதல் கலந்த காமத்தைக் காட்டுவதாகத் தென்படும். ஆனால், அவ்வாறு தியேட்டருக்கு வந்த இளம் நெஞ்சங்களிடத்தில் குடும்ப வன்முறை குறித்த அருவெருப்பூட்டும் உணர்வை விதைத்த காரணத்திற்காக இப்படத்தைப் பாராட்டலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: ஆகஸ்ட் 20-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

பெருமூச்சு விட்ட பங்குச்சந்தை… ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் இவை தான்!

அமெரிக்க அரசியல் குழப்பத்தின் அடிப்படை காரணம் என்ன? பகுதி 2

பாடநூல்களின் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பியூட்டி டிப்ஸ்: உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share