EDயை தொடர்ந்து IT… ‘எம்புரான்’ படக்குழுவுக்கு அடுத்தடுத்து நெருக்கடி!

Published On:

| By Selvam

‘எம்புரான்’ படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 4) சோதனை நடத்திய நிலையில், படத்தின் இயக்குனரும் நடிகருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை இன்று (ஏப்ரல் 5) சம்மன் அனுப்பியுள்ளது. IT Dept issues notice

கடந்த மார்ச் 27-ஆம் தேதி பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் குஜராத் கலவரம், பிஎம்எல்ஏ சட்டத்தை மத்திய அரசு தவறாக பயப்படுத்துவதாக குற்றம்சாட்டி சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து எம்புரான் படத்தில் 27 இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டன. இந்தநிலையில், படத்தின் தயாரிப்பாளரான கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். எம்புரான் படத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்ததால் தான், படத்தின் தயாரிப்பாளரை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தநிலையில், கோகுலம் கோபாலன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.

இந்த பேச்சுக்கள் ஓய்வதற்குள் படத்தின் இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கோல்ட், ஜன கண மண, கடுவா ஆகிய மூன்று படங்களை பிருத்விராஜ் தயாரித்து நடித்திருந்தார். இதில் அவர் நடிகருக்கான சம்பளத்தை வாங்கவில்லை. இருப்பினும் இணை தயாரிப்பாளராக பிருத்விராஜ் ரூ.40 கோடி சம்பாதித்துள்ளார். இந்தநிலையில், மூன்று படங்களின் வருமான கணக்குகளை கேட்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் பிருத்விராஜுக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக பிருத்விராஜ் ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தனது வழக்கறிஞர் மூலமாக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

“எம்புரான் படத்தில் மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, அரசியல்வாதிகளை கைது செய்வது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதனை வெளிச்சம்போட்டு காட்டியதால் எம்புரான் படக்குழுவையும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை தற்போது நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது” என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். IT Dept issues notice

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share