சந்திரயான் 3: லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கியது!

Published On:

| By Monisha

landing vikram lander in moon

சந்திரயான் 3 பயணத்தில் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணியை இன்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது இஸ்ரோ.

விண்வெளி பயணத்தில் புதுமையை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் பணியை இஸ்ரோ மாலை 5.44 மணிக்கு தொடங்கியது.

ADVERTISEMENT

15 நிமிடங்களில் 8 கட்டங்களாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. கடந்த முறை இந்த இடத்தில் தான் சந்திரயான் 2 மிஷன் தோல்வியடைந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்குமே திக் திக் நிமிடங்களாக இந்த 15 நிமிடம் அமைந்துள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவிற்கு அருகில் 30 கி.மீ உயரத்தில் மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் சுற்றி வரும் போது லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு நிலவில் இருந்து 7.4 கிலோ மீட்டருக்கு முதல் கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது லேண்டரின் வேகம் 1,200 கி.மீ குறைக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட செயல்முறைக்கே 10 நிமிடங்கள் ஆகும்.

ADVERTISEMENT

தொடர்ந்து 7.4 கி.மீ தூரத்தில் உள்ள லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு 6.8 கி.மீ உயரத்திற்கு இறக்கப்பட உள்ளது. இது தான் லேண்டரை தரையிறக்கும் இரண்டாவது கட்டமாகும். இந்த இரண்டாவது கட்டத்தில் உயரத்தை குறைப்பதோடு மற்றொரு செயலையும் இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. அதாவது, பக்கவாட்டில் பார்த்தவாறு இருக்கும் விண்கலம் தரையிறங்குவதற்கு வசதியாக லேண்டர் 50 டிகிரி கோணத்திற்கு திருப்பப்பட உள்ளது.

landing vikram lander in moon

ADVERTISEMENT

நிலவில் இருந்து 800 மீட்டர் உயரத்திற்கு லேண்டரை கொண்டு வருவதுதான் மூன்றாவது கட்டம். 50 டிகிரியில் இருக்கும் லேண்டரை முழுவதும் நேராக மூன்றாம் கட்டத்தில் திருப்பப்பட உள்ளது.

நான்காவது கட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் இருந்து லேண்டர் 150 மீட்டர் உயரத்திற்கு இறக்கப்படும். அப்போது லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடு பள்ளங்களைத் துல்லியமாக கவனித்து, சமதளப் பரப்பைத் தேர்வு செய்யும். பின்பு தேர்வு செய்த பாதுகாப்பான இடத்திற்கு மேல் 60 மீட்டர் உயரத்திற்கு வருவது தான் ஐந்தாவது கட்டமாகும்.

landing vikram lander in moon

அறுபது மீட்டர் உயரத்தில் இருந்து காற்றில் மிதந்து விழும் இறகைப் போல விண்கலம் மெல்ல மெல்ல கீழ்நோக்கி 10 மீட்டர் உயரத்திற்கு லேண்டரை கீழே இறக்குவதுதான் ஆறாவது கட்டம்.

7வது கட்டத்தில் ராக்கெட் எஞ்சின்கள் நிறுத்தப்படும். எஞ்சின்கள் நிறுத்தப்பட்டவுடன் விண்கலம் 10 மீட்டர் உயரத்தில் இருந்து கல் விழுவது போல மாலை 6.04 மணிக்கு  நிலவில் விழும். விழுந்த வேகத்தில் தூசுகள் மேலே எழும்பியிருக்கும். இந்த தூசுகள் அடங்கும்வரை ஏதும் செய்யாமல் விண்கலம் அப்படியே இருக்கும்.

landing vikram lander in moon

2 மணி நேரத்திற்கு பிறகு லேண்டரில் இருந்து பிரக்யன் ரோவர் வெளியே வந்து லேண்டரை புகைப்படம் எடுக்கும். லேண்டர் ரோவரை புகைப்படம் எடுப்பது தான் 8வது கட்டமாகும்.

லேண்டர் மற்றும் ரோவர் ஒன்றை  ஒன்று  எடுத்து அனுப்பும் புகைப்படத்தை பார்க்க தான் இந்தியா மட்டுமின்றி உலகமே காத்திருக்கிறது.

மோனிஷா

ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி!

“நான் ஓரளவுக்கு பேச காரணமே பீட்டர் அல்போன்ஸ்தான்”: மு.க.ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share