ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் 4 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈரான் டிவி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது லைவ் ஒளிபரப்பில் செய்தி வாசிப்பாளர் தப்பி ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Israeli Strike Hits Iranian TV Office – News Anchor Flees Live On Air
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை இஸ்ரேல், அமெரிக்கா கடுமையாக எதிர்க்கின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் ஈரானுக்கு எதிராக மூர்க்கமாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பதாக கூறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், ஈரானின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்குகளையும் அழித்து வருகிறது. ஈரான் நாட்டுக்குள் நுழைந்த இஸ்ரேல் போர் விமானங்கள் பல்வேறு மாகாணங்களில் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தும் வருகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் இந்த தாக்குதல்களுக்கு ஈரானும் பதிலடி தந்து வருகிறது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஈரானின் டிவி சேனல் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இந்த தாக்குதலில் பல பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் டிவி சேனல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது லைவ் ஒளிபரப்பில் அமர்ந்திருந்த பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் பதற்றத்துடன் தப்பி ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் ஈரானின் ராணுவ தளங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தும் வருகிறது.