ஈரான் நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சரமாரி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
ஈரான் அணுசக்தி ஆயுதங்களை வைத்திருக்கிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
மேலும் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. 2003-ம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிப்புக்குப் பிறகு அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவக் குவிப்பு என்று கருதப்படுகிறது. அமெரிக்கா, விமானந்தாங்கி போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஈரான் அருகே நிறுத்தி உள்ளது.
இதனிடையே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்று பிப்ரவரி 26-ந் தேதி ஓமானின் மத்தியஸ்தத்துடன் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தன.
இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இணைந்து இஸ்ரேல் இன்று பிப்ரவரி 28-ந் தேதி சரமாரி வான்வழித் தாக்குதல் நடத்தின. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. தெஹ்ரான் நகரம் முழுவதும் பெரும் குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்கின்றன. ஈரான் அதிபர் மாளிகையும் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஈரான் அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இத்தாக்குதலையடுத்து இஸ்ரேல்- ஈரான் இடையே போர்ச் சூழல் உருவாகி இருக்கிறது.
ஆனால் இஸ்ரேல் தனது பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஈரான் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் இஸ்ரேல் தமது வான்வெளியை மூடி இருக்கிறது.
