ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் சர்வதேச அளவில் மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இருதரப்பிலிருந்தும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இஸ்ரேல் ராணுவம் ஈரானின் அணு நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதனால் ஈரானில் அணு கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் இயக்குனரான ரஃபேல் க்ரோஸி பேசியதாவது,

“ஈரான் மீது நடத்திய இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அணு உலைகள் மீதான தாக்குதல்கள் குறித்து, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் (IAEA) அதிகாரப்பூர்வமாக தகவலறிந்து கொண்டது.
இந்நடவடிக்கைகள், ஈரான் நாட்டில் உள்ள அணு உலைகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் தற்போது ஈரானின் அணு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்.
இதன் மூலம், பாதிக்கப்பட்ட அணு உலைகளின் நிலை குறித்து உறுதிப்படுத்தவும், பரந்துபட்ட அளவில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பிரச்சனைகளை மதிப்பீடு செய்யவும் முயற்சிக்கிறோம்.
நடன்ஸ் (Natanz) நகரத்தில் உள்ள அணுஉலை தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கதிர்வீச்சு கசிவு (radiation leak) அல்லது அதன் அளவு அதிகரித்துள்ளதாக எந்த அறிகுறியும் இல்லை. இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் ஃபோர்டோ (Fordow) ஆகிய மற்ற அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளது என்று ஈரான் அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர்.
இந்த நிலைமை மிகவும் கவலையை ஏற்படுத்துவதாகும். நான் ஏற்கனவே பல முறை எடுத்துக்காட்டியதுபோல், எந்த சூழ்நிலையிலும் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. இது மக்களின் உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும்

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள IAEA ஆய்வாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். நமது ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால், அவர்கள் காயம் அடையாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இப்போது நடக்கும் போர் சூழ்நிலையும், அதனால் ஏற்பட்ட பதற்றமும் இருந்தபோதிலும், தீர்வுக்கான ஒரே வழி – உரையாடல் மற்றும் கூட்டாண்மை என்பதை நினைவுகூர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
