டிரம்புக்கு தங்க பேஜர் பரிசளித்த நெதன்யாகு: பின்னணி என்ன?

Published On:

| By Kumaresan M

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவரை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றார்.

வாஷிங்டனில் இரு தலைவர்களும் சந்தித்து பல்வேறு விஷயங்களை பேசினர். அப்போது, பெஞ்சமின் நெதன்யாகு முற்றிலும் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட பேஜர் ஒன்றை டிரம்புக்கு பரிசாக அளித்தார். இந்த தகவலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.

தங்க பேஜர் பரிசளித்த பின்னணி என்ன தெரியுமா?

கடந்த 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் மோதல் உச்சத்தில் இருந்தது. அப்போது, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெய்ரூட் உள்ளிட்ட லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் பெரிய தாக்குதலை நடத்தியது. நாடு முழுவதும் பேஜர்கள் வெடித்து சிதறி கிலியை ஏற்படுத்தியது.

அதாவது, பேஜரில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பினர் வெடிக்கும் போர்ட் என்ற சாதனத்தை பொருத்தி அதில், 3 கிராம் அளவுக்கு வெடிமருந்தை நிரப்பியுள்ளனர். பேஜர்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே இந்த வெடிமருந்து நிரப்பும் வகையில் மொசாட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருந்தது. பேஜரில் பாஸ்வேர்ட் வந்தவுடன் வெடிக்கும் வகையில் இந்த பேஜர்கள் செட் செய்யப்பட்டிருந்தன.

இப்படி லெபனானில் 3 ஆயிரம் பேஜர்கள் இஸ்ரேலால் வெடிக்க வைக்கப்பட்டது. இதில் 32 பேர் கொல்லப்பட்டனர். 3 ஆயிரம் பேர் காயமடைந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களும் பலியானார்கள். அடுத்த நாள் , லெபனானில் வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. ஹிஸ்புல்லாவும் லெபனானும் கதி கலங்கி போனது. ஹிஸ்புல்லா அமைப்பை கட்டுக்குள் கொண்டு வர, பேஜர் தாக்குதலே முக்கிய காரணம் ஆகும்.

தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. தற்போது, காசாவின் ஹமாஸ் அமைப்புடனும் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதனால், மத்திய தரைக்கடல் பகுதி அமைதியாக உள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான போரில் தாங்கள் வெற்றி பெற முக்கிய காரணமக இருந்த பேஜரை நினைவு கொள்ளும் வகையில்தான் டிரம்புக்கு தங்க பேஜரை நெதன்யாகு வழங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share