14 மாத சண்டைக்கு பிறகு இஸ்ரேல், ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்

Published On:

| By Kumaresan M

14 மாத கால சண்டைக்கு பிறகு இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன் வந்துள்ளன.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினர் புகுந்து கடும் தாக்குதல் நடத்தினர். ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோரை காசாவுக்குள் பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் காசா மீது கடும் தாக்குதல் நடத்தியது. காசாவில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேர் இதுவரை கொல்லப்பட்டதாக தகவல் உள்ளது. அதோடு, லெபனானை மையமாக கொண்டு செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து,  ஈரான் நாடும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரானை தாக்கியது.

இந்த நிலையில், இரு தரப்புக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் முயன்று வந்தன.  இந்த நாடுகளின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் லெபனான் நேரப்படி காலை 4 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபர்ஜோ பைடன் கூறுகையில், “இது உலகத்துக்கு கிடைத்த நல்ல செய்தி. அடுத்து, காசாவிலும் போர் நிறுத்தத்துக்கு முயற்சி செய்வோம். காசாவில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் முயற்சி எடுக்கப்படும்” என்று  தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம் செய்துள்ளதால்  காசாவில் ஹமாஸ் அமைப்பினர்  மீது நாம் கூடுதல் கவனம் செலுத்த முடியும்” என்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஈ.சி.ஆரில் 100 பைக்குகள் பறிமுதல்… சில்வண்டுகளை பொறி வைத்து பிடித்த போலீஸ்

தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share