தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று (டிசம்பர் 17) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும்.
நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 19 ஆம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
இன்று தென்கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 19 ஆம் தேதி லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
விடாமுயற்சி: ரிலீஸுக்கு முன்பே ரூ. 250 கோடி வியாபாரம்?
’பாதிக்கப்பட்ட மீனவர்களே கழிவை அகற்றுவது மனித தன்மையற்ற செயல்” : கமல்
