மாஸ்கோ பயங்கரம் : துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் பலி… பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்!

Published On:

| By christopher

ISIS Terror attack in Moscow

ரஷ்யாவில் நேற்று (மார்ச் 22) இரவு நடந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இக்கொடூர சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தற்போது பொறுப்பேற்றுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹால் கச்சேரி அரங்கில் ‘பிக்னிக்’ எனும் ராக் குழுவினர் நேற்று இரவு இசைக்கச்சேரி நடத்தினர். அப்போது அரங்கிற்குள் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த 6 மர்ம நபர்கள் மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தொடர் தாக்குதலால் கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்தும் எரிந்தது.

இக்கொடூர தாக்குதலில் 60 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இசை நிகழ்ச்சிக்காக சுமார் 6000 பேர் கூடியிருந்த நிலையில், மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூடும், அதற்கு பயந்து மக்கள்  அலறி ஓடும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய தலைநகரில் ஏற்பட்ட இச்சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கட்டிடத்தை சுற்றி வளைத்து இரவு முழுவதும் மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கண்மூடித்தனமான கொடூர தாக்குதலுக்கு ரஷ்ய அதிகாரிகள் முதலில் உக்ரைனை குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

இதுதொடர்பாக டெலிகிராம் குழுவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மாஸ்கோ புறநகர்ப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தினோம். தாக்குதல் நடத்தியவர்கள் பாதுகாப்பாக தப்பித்துவிட்டனர்’ என்று ஐஎஸ்ஐஎஸ் தெரிவித்துள்ளது.

உலகளவில் ரஷ்யாவின் உளவுத்துறையான கேஜிபி மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகரிலேயே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல் நடத்திவிட்டு தப்பியிருப்பது அதிர்ச்சியையும் பலத்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

https://twitter.com/PRMEENA7781/status/1771377416566702558

குரோகஸ் சிட்டி ஹால் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சிகிச்சை அளித்து வரும் மருத்துவ ஊழியர்களை பாராட்டியுள்ளார்.

மாஸ்கோ தாக்குதலை தொடர்ந்து விமான நிலையங்கள், போக்குவரத்து மையங்கள் என நாடு முழுவதும் ரஷ்யா அரசு பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது. அடுத்த 2 நாட்கள் நடைபெற இருக்கும் அனைத்து பெரிய அளவிலான பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி கண்டனம்!

மாஸ்கோவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த துயரமான நேரத்தில் ரஷ்யாவுடன் இந்தியா நிற்பதாக கூறினார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாஸ்கோவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. துக்கத்தின் இந்த நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்துடனும் மக்களுடனும் இந்தியா நிற்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

CSKvsRCB : முதல் போட்டியில் அபார வெற்றி… கேப்டன் ருதுராஜ் என்ன சொல்கிறார்?

உங்களது வாழ்க்கைத் துணை உங்கள் வழிக்கு வரவில்லையென்றால்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share